எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு அந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்வதாகவும் அதை கண்டித்தும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் மேலதிகாரிகளின் அளிக்கப்படும் புகார்களின் மீது விசாரணை நடத்தாமல், வழக்கு பதிவு செய்வதோ கைது செய்வதோ கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவோரிமிடருந்து நேர்மையானவர்களை காப்பதற்கான வழிமுறைகளையும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு, எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்வதாக உள்ளதாக கூறி வடமாநிலங்களில் போராட்டங்கள் வலுத்தன. அப்போது நடந்த வன்முறையில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே ஒருசில போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, அந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தீர்ப்பிற்கு முன்னதாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு இருந்த அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் சார்பில் ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும்  ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.