காவல்துறை துணை ஆணையர் தொலை பேசியில் அழைத்து திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் எனவும் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியவில்லை எனவும் திமுகவின் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வந்ததும் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மாணவர்கள் போராடி வந்த நிலையில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என மத்திய அமைச்சர்களும் தமிழக அமைச்சர்களும் உறுதி அளித்தனர். 

ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடையாது என உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பு எதிராக செயல்பட முடியாது என கூறி கையை விரித்தது தமிழக அரசு. 

இதையடுத்து அடுத்த நாளே கலந்தாய்வை தொடங்கி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து டாக்டராகிவிடுவோம் என்ற எண்ணத்தில் திளைத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இதனால் மனமுடைந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே நீட் தேர்வு விவகாரமாக திமுக ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சிகள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதற்கு தமிழக அரசிடம் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து, மக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் இருக்கும் அரசியல் கட்சி போராட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருச்சியில் நடைபெற இருந்த திமுக பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இதுகுறித்து செய்தியாளருக்கு பேட்டியளித்த திமுகவின் கே.என்.நேரு காவல்துறை துணை ஆணையர் தொலை பேசியில் அழைத்து திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் எனவும் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியவில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வந்ததும் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.