#BREAKING திமுக முக்கிய பிரமுகர் சஸ்பெண்ட்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...!
கரூரை சேர்ந்த மாநில விவசாயி அணி செயலாளர் ம.சின்னசாமி திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.
கரூரை சேர்ந்த மாநில விவசாயி அணி செயலாளர் ம.சின்னசாமி திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.
கடந்த 1972ம் ஆண்டு அதிமுக கரூர் மாவட்டச் செயலாளராகவும், பின்பு அதிமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளாராகவும் ம.சின்னசாமி இருந்தார். 1980 -1984 வரை எம்ஜிஆர் அமைச்சரவையில் தமிழக தொழில்துறை அமைச்சராக இருந்தார். பின்னர், அதிமுக தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். தற்போது மாநில விவசாய அணிச் செயலாளராகப் பதவி வகிக்கின்றார். ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.
இதனையடுத்து, அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். மேலும், ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததாகவும் கூறப்பட்டது. ஆகையால், இன்று அதிமுகவில் சின்னசாமி இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், திமுகவில் இருந்து சின்னசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் ம.சின்னசாமி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.