dmk karunanithi son and daughter with angry
எப்பவாச்சும் பிரேக்கிங்னா பரவாயில்ல! எப்பவுமே பிரேக்கிங், பிக் பிரேக்கிங், பிக்கஸ்ட் பிரேக்கிங்னா நாங்க என்னடா பண்ணுவோம்? புள்ள குட்டிகள இஸ்கூலுக்கு அனுப்ப வேணாமா! பொழப்ப பார்க்க வேணாமாடா!...என்று தமிழக சிட்டிசன்கள் மீடியா திசையை நோக்கி கையெடுத்து அழுவாத குறையாக நொந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் எங்கேயாவது நாலு போலீஸை ஒன்றாக சேர்த்து பார்த்துவிட்டால் போதும் உடனே ‘தமிழகமெங்கும் போலீஸ் குவிப்பு. சிறப்பு பாதுகாப்பு.’ என்று தனியாக நியூஸ் போட்டு தாளித்தெடுக்கிறது மீடியா.
அதிலும் இன்று தமிழக டி.ஜி.பி. தனது துறைக்குள் இயல்பாக ஒரு உத்தரவை போட்டுவிட அதை வேறு மாதிரி புரிந்துகொண்டுவிட்டதாம் மீடியா. ‘அனைத்து சிறப்பு காவல் படையும் தயார் நிலையில் இருக்க டி.ஜி.பி. உத்தரவு. முக்கிய சம்பவம் தமிழகத்தில் நடக்குமா?’ என்று பிரேக்கிங்கை தட்டிவிட, பிய்த்துக் கொண்டது தமிழகம்.
’முக்கிய சம்பவம்’ என்று சொன்னதற்கு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கற்பித்தார்கள். அதில் முக்கியமானவை...
* கருணாநிதியின் உடல்நிலை மிக கவலைக்கிடம்
* எம்.நடராஜனின் உடல் நிலை மிக மோசம்.
* கணவரை பார்க்க சசிகலா பரோலில் வருகிறார்.
* தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட போகிறது
...என்று வரிசை கட்டின.
தமிழக மக்கள் பதைபதைத்துவிட்டார்கள். அவனவன் பின்னங்கால் பிடறியில் பட வூட்டை நோக்கி ஓடி வர ஆரம்பித்த வேளையில்தான். தமிழக காவல்துறை தலைமையே ‘இது வழக்கமான உத்தரவுதான். எங்கள் துறைக்குள் நடக்கும் சாதாரண நடவடிக்கை.’ என்று அறிவித்து ஆசுவாசப்படுத்தியுள்ளது.
இதற்குள் கருணாநிதியை பற்றி கிளம்பிய தகவலை அடுத்து கோபாலபுரம், அறிவாலயம் இரண்டு மையங்களிலும் டெலிபோன் தெறித்து விழுமளவுக்கு போன்கால்கள் வந்து குவிந்தன.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ‘தி.மு.க. தலைவர் கலைஞர் நலமுடன் உள்ளார். தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.’ என்று கருணாநிதியின் மகளும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்து அக்கட்சி தொண்டர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளன.
தொண்டர்கள் கூல் ஆகிவிட்டாலும் கூட கருணாநிதியின் வாரிசுகள் அமைதியாகவில்லையாம். ‘ஆ! ஊன்னா இப்படி அப்பாவோட உடல் நிலையை பத்தி ஏதாச்சும் வதந்தி கிளப்பிவிட்டு டார்ச்சர் பண்றாங்க. நிர்வாகிகளும், தொண்டர்களும் நம்மளை விட பதைச்சுடுறாங்க. இந்த வதந்திகளுக்கு விளக்கஞ் சொல்லி, விளக்கஞ் சொல்லியே வெறுத்துடும் போலிருக்குதே! நல்ல வேளை இதெல்லாம் அப்பாவுக்கு தெரியாது, பாவம் அவரு.” என்று நொந்திருக்கிறார்களாம் தங்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில்.
இப்படி விதவிதமா வதந்தி கிளப்புறவனுங்கள வெச்சு செஞ்சா என்ன?
