நல்ல நேரம், எமகண்டம், ராகு காலம், சந்திராஷ்டமம், அஷ்டமி நவமி, சூலம், திசைவிடுப்பு, பரிகாரம், கரணம்....இவையெல்லாம்தான் இப்போது தமிழக அரசியலை ஆட்டி வைக்கும் விஷயங்கள். இதற்கு செந்தில்பாலாஜி மட்டும் விதிவிலக்கா என்ன? ராகுகாலம் முடிந்த பின்னரே அறிவாலய கருவறைக்குள் சென்று, ஸ்டாலினின் விஸ்வரூப தரிசனத்தை வணங்கியிருக்கிறார் செந்தில்பாலாஜி. 

நாத்திக கொள்கைகளும், பகுத்தறிவு கோட்பாடுகளும், சுயமரியாதை சிந்தனைகளும் பிசைந்து கலந்த திராவிட இயக்க மற்றும் சுயமரியாதை கட்சிகளில் இருந்து பிறந்ததுதான் தி.மு.க. அதிலிருந்து பிரிந்ததுதான் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். ஓவர் சென்டிமெண்ட்ஸ் பார்த்ததில்லை, ஜெயலலிதாவோ சகுனம் பார்க்காமல் வாயை கூட திறக்க மாட்டார் எந்த நாளிலும். பகுத்தறிவை தன் இரத்தத்தில் கலந்து வளர்ந்த கருணாநிதி மஞ்சள் துண்டுக்கு மாறியதன் காரணம் கடைசிவரை புரியவில்லை. மனைவி துர்காவின் கருத்துக்கு மதிப்பளித்து ஸ்டாலினும் ஆலய சம்பிரதாயங்களை அரவணைத்துக் கொள்கிறார். 

ஆக திராவிடம் பேசும் கழகங்களின் அரசியல் இப்படியாகிவிட்ட நிலையில் ராகு காலம் முடிந்த பின், கெளரி பஞ்சாங்கத்தின் படி நல்ல நேரம் விளங்கும் நேரத்தில் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் கலந்திருக்கிறார் செந்தில்பாலாஜி! என்று விமர்சகர்கள் சதாய்க்கிறார்கள். செந்தில் ஸ்டாலினின் கரம் பற்றி தி.மு.க.வில் ஐக்கியமானபோது துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, கரூர் சின்னசாமி, கே.சி.பழனிசாமி, கே.என்.நேரு உள்ளிட்ட பலர் இருந்திருக்கின்றனர்.