ஆதிதிராவிட  பழங்குடியின மக்களை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜ. கண்ணப்பனை அமைச்சரவையில்  இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிபந்தனை ஜாமினில் ஜெயக்குமார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளில் திமுகவினர் ஈடுபடுவதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அங்கிருந்த திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டு அந்த வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார். இதனால் 19 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ராயபுரம் காவல்நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்த நிலையில் 3-வது நாளான இன்று ராயபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட பழங்குடி மக்களை இழிவாக பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு அந்தத் துறையையே ஒதுக்கியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வாய் திறக்காதது வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளதாகவும் கூறினார். எனவே அமைச்சர் பதவியில் இருந்து ராஜகண்ணப்பனை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்

 தமிழகத்தில் காவலர்களை அச்சுறுத்தும் நிலைதான் உள்ளதாக தெரிவித்தவர், தற்போது காவலர்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்கள் பெரிய அளவில் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தவர், கட்சியையும் ஆட்சியையும் மக்களிடத்தில் செல்லாக்காசாக்குவதற்க்கான பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு 2024 ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என கூறினார். எனவே தவறு செய்யும் கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜெயலலிதா படம் அகற்றம்

மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றி விட்டதாக தெரிவித்தவர், வக்கிரபுத்தி கொண்ட கட்சியும் ஆட்சியும் திமுக தான் என குற்றம்சாட்டினார். அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் ஸ்டாலின் படம் தான் உள்ளதாக தெரிவித்தவர்,முதலமைச்சர் ஸ்டாலின் விளம்பர அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். ஓமந்தூரார் மருத்துவமனையில் வைக்கப்பட்ட பேனர் ஒரு பெண் மீது விழுந்து காயம் ஏற்பட்டு இருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக இருப்பதாக தெரிவித்தவர், நீதிமன்றம் இந்த பிரச்சனையில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நீட் தேர்விற்கு விலக்கு வாங்கி தருவதாக கூறி மாணவர்களை திமுக ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் திமுகவை நம்பி மாணவர்கள் படிக்காமல் போனதாகவும் தெரிவித்தார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 60க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டு வர தமிழக அரசு நடவடுக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.