திமுக என்பது கட்சியே அல்ல அது கந்துவட்டி கடை என்று  சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கானை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்பட்டு பகுதியில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளருமான சி.வி சண்முகம் கலந்துகொண்டு பாசறை நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான புத்தகத்தை வழங்கினார். அதில் அமைச்சர் சி.வி சண்முகம் பேசியதாவது:  

நாம் விரைவில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம், பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி கழக ஆட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என பொதுமக்கள் மற்றும்  அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப் படுகிறது. மக்களிடம் உள்ள இந்த நல்ல எண்ணத்தை பாசறை பொறுப்பாளர்கள் வாக்குகளாக மாற்ற வேண்டும், திமுக என்பது ஒரு குடும்ப கட்சி, வாரிசு இயக்கமாகும், திமுகவினர் கவர்ச்சியான திட்டங்களை கூறி மக்களை திசை திருப்புவார்கள். கட்டப்பஞ்சாயத்து நில அபகரிப்பு ஆகியவை திமுக கும்பலின்முக்கியநோக்கமாகும். 

திமுக என்பது ஒரு ஏஜென்ட் அரசியல் கட்சி, மொத்தத்தில் திமுக என்பது ஒரு கட்சியே அல்ல அது ஒரு கந்து வட்டி கடை, ஆனால் அம்மாவின் அரசு மக்களுக்கான இயக்கம், உழைப்பவர்களுக்கு பதவி தரும் ஒரே இயக்கம் என்றார்.மேலும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி செய்து ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார்கள். பாரத பிரதமர் மோடி இந்தியாவிலேயே கொரோனா தடுப்பில் தமிழகம் தான் சிறந்த மாநிலம் என அனைத்து முதலமைச்சர்கள் மாநாட்டிலும் பாராட்டியுள்ளார் என்றார்.