தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக அரசு மீது வேண்டுமென்றே ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த அது பூமாரங்காக மாறி திமுகவையே திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது ஆளும் அ.தி.மு.க. அரசு மீது குற்றச்சாட்டு சொல்வதை மட்டுமே ஸ்டாலின் தேர்தல் பிரசாரமாக செய்துவருகிறார். அதற்கெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்க பதிலடி கொடுத்துவருகிறார். இப்போது தி.மு.க.வினரை அலறச் செய்யும் வகையில் ஒரு மினி புத்தகத்தைப் போட்டு ஸ்டாலினை மிரட்டியுள்ளனர் சிலர். ஆம், தி.மு.க.வின் பொய் மூட்டைகள் என்ற புத்தகம் ஸ்டாலின் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் பொய் என்று அம்பலப்படுத்துகிறது இந்த புத்தகம். 
 
எடப்பாடியார் அரசு மீது ஸ்டாலின் என்னவெல்லாம் குற்றச்சாட்டு வைக்கிறாரோ, அதற்கெல்லாம் தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.  நீட் தேர்வு தொடங்கி, ஜல்லிக்கட்டு, நிதி நிர்வாகம், ஊழல் புகார், எட்டுவழிசாலை போன்ற அனைத்து விஷயங்களுக்கும்;தெளிவான விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். இந்திய அளவில் எடுக்கப்படும் அத்தனை ஆய்வுகளிலும் தமிழகம் முதல் இடம் பெற்றிருக்கும் நிலையில், ஸ்டாலின் சொல்வது எல்லாமே பொய் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது இந்த புத்தகம். 

இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ’’70களில் திமுக ஆட்சியின்போது நிகழ்ந்த சர்க்கரை பேர ஊழல், வீராணம் ஊழல், பூச்சிமருந்து  ஊழல் போன்றவை மக்கள் மனங்களிலிருந்து இன்னமும் அகலவில்லை. இதேபோல திமுக ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து விசாரணை நடத்திய சர்க்காரியா கமிஷன் குறித்த நினைவுகளும் பசுமையாக இருக்கின்றன. மிக சாதாரண நிலையிலிருந்த திமுகவினர் கோடிகளில் புரளும் அளவிற்கு அரசு பணத்தை கொள்ளையடித்த சம்பவங்கள் அநேகம் உண்டு. இந்த பகற்கொள்ளை அடுத்தடுத்து அமைந்த திமுக ஆட்சிகளிலும் தொடர்ந்தன. இதன் காரணமாக திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என் நேரு, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழரசி என பலர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடரப்பட்டு அவை இன்றும் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகளை அரசுத் தரப்பு வேண்டுமென்றே துரிதப்படுத்தவில்லை. பகை உணர்ச்சியோடு அப்படி செய்திருந்தால் திமுகவைச் சேர்ந்த பல மாஜிக்கள் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள். அதை செய்யத் தவறியதால் இன்றைக்கு அவர்கள் அதிமுக அரசுமீது புழுதி வாரி தூற்றுகிறார்கள். ஊழலைப் பொறுத்தவரை திமுகவிற்கு எல்லைகள் கிடையாது. தமிழகத்தைப் போலவே டெல்லி ஆட்சியில் அங்கம் வகித்தபோது அந்த கட்சியினர் அரங்கேற்றிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான 2ஜி ஊழல் தொடர்பான விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய இரண்டு மத்திய அமைப்புகளும் மேல்முறையீடு செய்துள்ளன. இதில் தொடர்புடைய கனிமொழி, அ.ராசா ஆகியோர் இந்தமுறை நிச்சயம் தப்பிக்க முடியாது என்பதாகவே டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படி அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் திமுகவினர் மீது இருக்கும் நிலையில் அதன் தலைவர் ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக ஆளுநரிடம் ஊழல் புகார் கொடுத்திருப்பதை கேலிக் கூத்தாகவே பலரும் பார்க்கின்றனர். முதல்வர் எடப்பாடிக்கு நாளுக்குநாள் அதிகரித்துவரும் செல்வாக்கை, குறிப்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்கிற அறிவிப்புக்கு பிறகு திமுகவினருக்கு வயிற்றெரிச்சல் அதிகமாகியிருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் அவர்களின் பொய்க் குற்றச்சாட்டுகள்’’ என அவர் தெரிவித்தார்.