ஊழல் குற்றச்சாட்டுகளால் திமுகவின் ஓட்டு வங்கிக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மை நிலையை நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எண்ணம். அதிமுகவினரின் எண்ணமும் அதுதான். அதனால்தான், தமிழக அரசு ஒரு ஆணையம் அமைத்தது. விசாரணை ஆணையம் பலருக்கும் சம்மன் அனுப்பி அவர்களை அழைத்து விசாரணை நடத்தி, அதனை பதிவு செய்து வருகிறது. இடையில் இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடை நீங்கும்போது மீண்டும் விசாரணை தொடங்கும். விசாரணையின் முடிவில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை நிலை நாட்டு மக்களுக்குத் தெரியவரும்.

திமுகவின் மீதான 2ஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. வெகு விரைவில் இந்த வழக்கின் தீர்ப்பு வரவிருக்கிறது. திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது ஊழல், நில அபகரிப்பு, அராஜகம், அத்துமீறல் உள்ளிட்டவற்றில் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போது எங்கள் அமைச்சர்கள் மீது எங்கு விசாரணை நடைபெறுகிறது? முதல்வர் மீது விசாரணை நடைபெறுகிறதா? வழக்கு உள்ளதா? எங்கள் அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறதா? யார் மீதும் வழக்கு இல்லையே. பொத்தம்பொதுவாக சொல்வது நிச்சயமாக எடுபடாது. கண்டிப்பாக திமுகவின் ஓட்டு வங்கிக்குத்தான் கடுமையான பாதிப்பு ஏற்படும்’’என அவர் தெரிவித்தார்.