DMK is dreaming - kadambur c.Raju

தூத்துக்குடி

திமுக இலவு காத்த கிளி போல உள்ளது என்றும், தமிழகத்தில் திமுகவால் என்றைக்கும் அரசியல் நடத்த முடியாது என்றும் தூத்துக்குடியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 109–வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு நடைப்பெற்றது.

இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. மாநில பேச்சாளர்கள் சின்னதம்பி, அறிவழகன், அம்புஜம், கிருபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியது: “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எனக்கு பிறகும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தை அ.தி.மு.க. ஆளும் என்று கூறினார். அவர் கண்ட கனவை, இலட்சியத்தை எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக தற்போதைய அரசு நடந்து வருகிறது.

திமுகவினர் தேர்தல் வருவதற்கு முன்பே, கனவு மந்திரி சபையை அமைத்து கனவிலே வாழ்ந்தவர்கள். திமுக இலவு காத்த கிளி போல உள்ளது. தமிழகத்தில் அவர்களால் என்றைக்கும் அரசியல் நடத்த முடியாது. தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது அவர்களுக்கு பகல் கனவுதான்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1982–ல் ஒரு இடைத் தேர்தல் நடந்தது. அதில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த தேர்தல் முடிவு வரும் முன்பே திமுகவினர் வெடி போட்டனர். நாம் செய்ய வேண்டியதை அவர்களே செய்தனர். அதே போன்று நாம் செய்த திட்டங்களை, அவர்களே செய்ததாக கூறுவார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு 4–வது குடிநீர் குழாய் திட்டம், கோவில்பட்டிக்கு 2–வது குடிநீர் திட்டம் தருவேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். அந்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதிலும் திமுகவினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். ஏனென்றால் அவர்கள் கனவிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம்.

அண்ணா பிறந்தநாளை கொண்டாடும் தகுதி அதிமுகவுக்குத்தான் உள்ளது. எம்.ஜி.ஆர். மறைந்த போது அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. அந்த இடைவெளியில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு ஜெயலலிதா முயற்சியால் கட்சி இணைந்தது.

தொடர்ந்து முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவு ஏற்பட்டு மீண்டும் இணைந்துள்ளது. எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு இருந்தது. அந்த வேறுபாடுகள் மறைந்து உள்ளன.

வருகிற 4, 5–ஆம் தேதியில் நமக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதற்கான வேலைகள் முடிந்து விட்டன.

ஜெயலலிதா எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் நவம்பர் மாதம் 22–ஆம் தேதி தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க உள்ளது. அன்றைய தினம் பல புதிய திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரவுள்ளது” என்று அவர் கூறினார்.