அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட உள்ள கலைஞர் சிலையை திறந்து வைக்க மோடி வருவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

கலைஞர் மறைந்து 100 நாட்கள் ஆனநிலையில் அவரது சிலை தற்போது வரை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்படவில்லை. கலைஞர் மறைந்து 100வது நாளில் அவரது சிலை அறிவாலயத்தில் வைக்கப்படும் என்று தி.மு.க தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீரென சிலை திறப்பை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தள்ளிப்போட்டுள்ளார். மேலும் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே கலைஞர் சிலையை வைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். 

இதற்காக அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளை தாங்கி நிற்கும் பீடம் தயாரிப்பு பணிகள் தற்போது துவங்கியுள்ளது. மேலும் கலைஞர் சிலையை திறக்கும் போது அண்ணா சிலையும் புதுப்பொழிவுடன் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனால் தான் இரவோடு இரவாக அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலை அகற்றப்பட்டுள்ளது. புதிய பொலிவுடன் அண்ணா சிலையையும், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையையும் டிசம்பர் 13ந் தேதி திறக்க உள்ளதாக தி.மு.க அறிவித்துள்ளது.

தேசியத் தலைவர்கள் வந்து இருவரது சிலைகளையும் திறந்து வைக்க உள்ளதாகவும் தி.மு.க தெரிவித்துள்ளது. ஆனால் எந்த தலைவர் என்கிற தகவலை தி.மு.க வெளியிடவில்லை. இங்கு தான் இந்த விவகாரத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் இருப்பதாக சொல்லப்படுகிறது. தேசியத் தலைவர்கள் என்றால் கலைஞரின் சிலையை திறக்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவராகவும், மிக உயரிய பொறுப்பில் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

 

தற்போது தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எடுத்துக் கொண்டால், அரசியலில் அவர் கஞைருடன் ஒப்பிடுகையில் கத்துக்குட்டி தான். எனவே ராகுலை வைத்து சிலையை திறக்க தி.மு.க தயாராக இருக்காது. ராகுலை விட்டால் தேசிய அளவில் மிகப்பெரிய தலைவர் என்றால் தற்போதைக்கு மோடி தான். மேலும் கலைஞரை போன்ற ஆளுமையின் சிலையை திறந்து வைக்கும் தகுதி பிரதமர் போன்ற பதவிகளில் இருப்பவர்களுக்கே உரியது என்று கூட தி.மு.க கருதலாம். 

அரசியல் ரீதியாக பா.ஜ.கவிற்கு எதிராக அணி திரண்டாலும் கூட கலைஞர் என்று வந்தால் அவரது சிலையை பிரதமராக இருக்க கூடிய ஒருவர் திறந்து வைத்தால் தான் மரியாதையாக இருக்கும் என்று கூட தி.மு.க வட்டாரங்களில் பேச்சு உள்ளது. எனவே கலைஞர் சிலையை திறக்க பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படுமா? அந்த அழைப்பை பிரதமர் ஏற்பாரா? என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வி.