திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு உயரவேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் துளியளவும் குறைந்துவிடக்கூடாது என்பதை கட்சி நிர்வாகிகளிடம் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நான் சொல்லவில்லை; உங்களில் ஒருவனாகத்தான் உள்ளக் கிடக்கையைத் தெரிவித்துள்ளேன். இந்தத் தேர்தல் திமுகவுக்கு வாழ்வா - சாவா என்று சிலர் விவாதிக்கிறார்கள். எனக்கு அதில் எள்ளளவும் உடன்பாடு இல்லை.‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற முத்திரை வரிகளைத் தந்தவர் கருணாநிதி. இந்தத் தேர்தல் களம் என்பது, கழகம் வாழுமா - வீழுமா என மனப்பால் குடித்தபடி, மார்தட்டிக் காத்திருப்போருக்கான களம் அல்ல. தமிழ்நாடு மீள வேண்டுமா - வாழ வேண்டுமா என்பதற்கான தேர்தல் களம் தொண்டர்களும் பொதுமக்களும், தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோரும் உணர்ந்திருக்கிறார்கள்.


அதிமுகவை நிராகரிப்போம் என ஒவ்வொருவர் மனதிலும் அடிக்கோடிட்டு எழுதி பசுமையாக வைத்துக்கொண்டால், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகழகம் தன் இலக்கை எளிதாகவே எட்டிவிடும்; தமிழகம் வாழும். இது ஒன்றுதான் நமது குறிக்கோள். அதற்கான முதல்கட்ட செயல்திட்டம்தான், 16 ஆயிரத்து 500 ஊராட்சி மற்றும் வார்டுகளில் கழகம் நடத்தவிருக்கும் ‘கிராமசபை மற்றும் வார்டு’க் கூட்டங்கள்.  நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றோம். அது மட்டுமல்ல, ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவின் அராஜகத்தையும், அதன் கைப்பாவையான மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சட்டமீறல்களையும் கடந்து திமுக வென்றது.
நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். ஆனால், அந்த வெற்றியை எளிதாகப் பெறுவதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா வகையிலும் தடுப்புகளையும் தடைகளையும் ஏற்படுத்துவார்கள். வாக்குகளைச் சிதைப்பதற்குப் பணபலம்-அதிகாரபலம் என அனைத்தையும் பயன்படுத்துவார்கள். அதனை நேரடியாக எதிர்கொள்வதற்கு நம்மிடம் இதயம் நிறைந்த வலிமை இருக்கிறது; பலமான ஆயுதம் இருக்கிறது; அந்த ஆயுதத்தின் பெயர், திராவிடம். நம்மிடையே யாராலும் பிரிக்க முடியாத ஒற்றுமையே அதன் வலிமை.
கைகளில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏந்தி, ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’என்ற பதாகைகள் தாங்கி, திமுக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள், பத்தாண்டுகளாகத் தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக ஆட்சி மீதான குற்றப்பத்திரிகைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்று ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்கிட வேண்டும். பதாகைகள், சுவரொட்டிகள் என எதிலும் பெரியார், அண்ணா, கருணாநிதி, கட்சித் தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது. பகுதி, ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் முழுமையாகச் சென்று சந்திப்பு நடத்திட வேண்டும். குரல் வாக்கெடுப்பு மூலம், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தீர்மானத்தைப் பலத்த ஒலியுடன் நிறைவேற்ற வேண்டும். மக்கள் நம் பக்கம்; ஆட்சி மாற்றம் நிச்சயம். 200 தொகுதிகள் இலட்சியம்; அதை வென்றெடுப்போம்; தமிழகத்தை மீட்டெடுப்போம்!” என்று கடிதத்தில் மு.க. ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.