திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும் திமுக ஏற்கும் என்று திமுக தலைவர் அறிவித்தார். இப்படிப்பட்ட நலிந்த மாணவர்களுக்கு அரசுதான் முன்வந்து உதவ வேண்டும். ஆனால், இந்த அரசு அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. பாட்டாளி மக்களின் தோழனாக இருக்கும் திமுக, இன்று ஒரு அரசு செய்ய வேண்டிய கடமையை எதிர்க்கட்சியாக இருந்து செய்திருக்கிறது.
மு.க.ஸ்டாலின் இதை அறிவித்த பிறகு முதல்வர் அறிவிக்கிறார். சிறிய விஷயத்தைக்கூட திமுக சொல்லித்தான் அரசு செய்கிறது. இந்த எண்ணம் முதலிலேயே வந்திருக்க வேண்டாமா? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இட இதுக்கீடு பெறவும் முழு முயற்சி எடுத்தவர் மு.க.ஸ்டாலின்தான். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று நீதிபதி தெரிவித்தார். ஆனால், அரசோ 7.5 சதவீதம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநரிடம் கையெழுத்துக்காக அனுப்பியது. திமுக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால்தான் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் கையெழுத்திட்டார்.
தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலினை கைது செய்யாமல் விட்டிருந்தால் அவர் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றிருப்பார். ஆனால், இந்த அரசு திமுக மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை கைது செய்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பொதுக்கூட்டங்களிலும் விழாக்களிலும் கூட்டம் அலைமோதியது என்று பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம். தமிழக அமைச்சர்கள் நடத்தும் கூட்டங்களில்கூட பொதுமக்கள் அதிகமாக கூடுகிறார்கள். அங்கெல்லாம் கொரோனா வராது. திமுக நடத்தும் கூட்டங்களில்தான் கொரோனா பரவும் என்று எடப்பாடி பழனிசாமி அரசு வேண்டுமென்றே கைது நடவடிக்கை எடுக்கிறது. உதயநிதி ஸ்டாலின் நடத்தும் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் முழுவதும் அதிமுக பெரிய விளம்பரம் செய்துள்ளது” என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.