Asianet News TamilAsianet News Tamil

திமுக அரசு அன்பு உள்ளத்தோடு இயங்கி வருகிறது... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரு தாய் மக்களாகக் கருதும் அன்பு உள்ளம் கொண்ட அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இயங்கி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

dmk govt is running as a loving govt that treats all people in same manner says cm stalin
Author
First Published Dec 20, 2022, 11:44 PM IST

மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரு தாய் மக்களாகக் கருதும் அன்பு உள்ளம் கொண்ட அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இயங்கி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, லயோலா கல்லூரியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா-2022 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பெரும்பாலும் அன்பைப் போதிப்பதாகத்தான் அமைந்திருக்கிறது. உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

இதையும் படிங்க: அரசு பள்ளிகளின் தரம் குறைந்ததற்கு இதுதான் காரணம்... திமுகவை விளாசிய நாராயணன் திருப்பதி!!

மிக எளிமையான வாசகம்தான், ஆனால் அதே அளவு வலிமையான வாசகமாகவும் இது இருக்கிறது. இயேசு கிறிஸ்து பெருமானின் இந்த ஒரு அறிவுரையைப் பின்பற்றினாலே உலகம் எங்கும் அமைதி தவழும். சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை இயேசுவின் போதனைகள் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இத்தகைய பண்புகள் தனிமனிதரின் குணங்களாக, சமுதாயத்தின் குணங்களாக, இந்த நாட்டின் குணங்களாக, ஏன், இந்த உலகத்தின் குணங்களாக மாற வேண்டும். மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரு தாய் மக்களாகக் கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும்.

இதையும் படிங்க: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஆட்சேபனை… விவசாயிகளிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!

திராவிட முன்னேற்றக் கழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது. இவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் திராவிட மாடல் ஆட்சி என்பது, அதுதான் இன்றைக்கு இந்த ஆட்சியினுடைய தத்துவம். குறிப்பாக சிறுபான்மையின மக்களுடைய நலனில் எப்போதும் அக்கறை செலுத்தி வரும் அரசு நம்முடைய கழக அரசு என்பதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். ஆகவே, நமக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை உணர்வோடு நமக்கான ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்க நாம் பணியாற்ற வேண்டும், பாடுபடவேண்டும். இயேசு பிரானின் அன்புக்கட்டளையைப் பின்பற்றி நம்முடைய மனங்கள் நிறையட்டும்! அனைவருக்கும் அன்பின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios