திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அடுத்த மருத்துவ அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்போடு தொண்டர்கள் காலை முதல் காவேரி மருத்துவமனையில் குவியத் தொடங்கியுள்ளனர். அதனால் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் விசாரித்து வருகின்றனர். 

நேற்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் ஆகியோரு கருணாநிதியை மருத்துவமனையில் பார்த்தனர். கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர். 

நேற்றிரவு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் அவர்களை சமாளிக்க போலீஸார் திணறினர். போலீஸாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மருத்துவமனையில் தொண்டர்கள் அசம்பாவிதங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

எனினும் ஏராளமான தொண்டர்கள் விடிய விடிய மருத்துவமனை பகுதியில் காத்திருந்தனர். விடிந்ததும் மேலும் பலர் குவிய தொடங்கியுள்ளனர். எனவே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொண்டர்கள் குவிந்துள்ளதாலும் கருணாநிதியை பார்க்க பல அரசியல் கட்சி தலைவர்கள் வருகை தருவதாலும் மருத்துவமனை அமைந்துள்ள டிடிகே சாலையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு மாற்றுப்பதைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதியின் உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அடுத்த அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக தொண்டர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். காலை 10 மணிக்குள்ளாக அடுத்த மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.