நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக பண உதவி செய்த விஷயம் வெளிச்சமாகி உள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் இ.கம்யூ, மா.கம்யூ. விசிக, மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகளுக்கு திமுக இடங்களை ஒதுக்கியது. இடதுசாரிகள், விசிக  தலா இரு இடங்களிலும், மதிமுக, கொமதேக தலா ஓரிடத்திலும் போட்டியிட்டன. இக்கட்சிகளில் இ.கம்யூனிஸ்ட்  மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய  கட்சிக்கு தலா ரூ.15 கோடியும், மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடியும் திமுக நன்கொடை வழங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

 
தேர்தல் செலவினங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.  அதில், திமுக ரூ.79.26 கோடியை செலவு கணக்காகக்  காட்டியுள்ளது. அந்தத் தொகையில் ரூ.40 கோடி மூன்று  கட்சிகளுக்கும் வழங்கப்பட்டதாகக் கணக்கு கணக்குக் காட்டியுள்ளது. ஆனால், இந்த விவரம் மா.கம்யூ. தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம்பெறவில்லை.
திமுகவிடம் நிதி உதவி பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள மா.கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் பணம் வசூலித்து செலவிட்டோம். அந்தக் கணக்கை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம். அதில் அதையும் மறைக்கவில்லை. மாநிலக் குழு அனைத்து விவரங்களையும் கட்சியின் மத்திய குழுவுக்கு அனுப்பிவிட்டது. விடுபட்ட செலவினங்கள் அடுத்த பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


இதேபோல இ.கம்யூ. மாநில ஆர்.முத்தரசன் கூறும்கையில், “கூட்டணி கட்சிகளிடம் தேர்தல் நிதி வாங்குவது வழக்கமானதுதான். அது தவறில்லை. எங்களுக்கு கிடைத்தது மோசடி பணம் அல்ல.” என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கருத்து கேட்கப்பட்டது. “கூட்டணி கட்சிகளுக்கு நிதி வழங்கியது வழக்கமான ஒன்றுதான்” என தெரிவித்தார்.
தேர்தலில் நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தலா ரூ.25 லட்சமும் செலவிட்டதாக பிரமாண பத்திரத்தில் திமுக கூறியுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.