மகன் வேட்பு மனு தாக்கலின் போது சென்டிமெண்டாக துரைமுருகன் ஒதுங்கிக் கொண்டார்.

ஒரு வழியாக வேலூரில் திமுக தற்போது தான் தேர்தல் வேலையை துவக்கியுள்ளது. முதற்கட்டமாக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்யும் வைபவம் அரங்கேறியது. பெரிய அளவில் விளம்பரங்கள் இல்லாமல் சத்தம் இல்லாமல் வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடு நடைபெற்றது. எவ்வித ஆர்பாட்டமும் இல்லாமால் தனது நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் மகனை அழைத்துக் கொண்டு வந்தார் துரைமுருகன். 

கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக மற்றும் சில உதிரிக்கட்சி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வந்த துரைமுருகன், தான் இங்கேயே இருப்பதாகவும் நீங்கள் சென்று வாருங்கள் என்று காதர் மொய்தீனுடன் மகனை அனுப்பி வைத்தார் துரைமுருகன்.

இதன் பிறகு கதிர் ஆனந்த், காதல் மொய்தீன், காங்கிரஸ், விசிக பிரமுகர்கள் ஆகியோர் உள்ளே சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். ஏற்கனவே ஒரு முறை வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் ரத்தான நிலையில் 2வது முறையாக கதிர் ஆனந்த் தாக்கல் செய்துள்ளார். அப்போது தந்தை துரைமுருகன் உடன் இல்லை.

கூட்டணி கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் துரைமுருகன் மகனுடன் செல்லவில்லை என்று திமுகவினர் கூறினர். ஆனால் இதில் துரைமுருகன் ஏதோ சென்டிமென்ட் பார்த்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் மகன் வேட்பு மனு தாக்கலின் போது துரைமுருகன் உடன் இல்லை என்று கூறுகிறார்கள். இதனிடையே மகன் வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ஏசி சண்முகம் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க என்னிடம் நேரம் இல்லை என்றார். மேலும் வேலூர் தொகுதியில் அனைத்தும் தங்களுக்கே சாதகமாக உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்தார். வேலூரில் திமுக வெல்வது உறுதி என்றும் அவர் கூறினார்.