எந்த மாநில அரசும் செய்ய துணியாத அரசு பள்ளி மாணவர்களுக்கான  இடஒதுக்கீட்டை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமல்படுத்தினர். 

நீட் தேர்வுக்கு மத்தியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கி நியாயத்தைப் பெற்றுக் கொடுத்தது அதிமுக அரசு தான் ஆனால் அதில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளக் கூடாது என அதிமுக தரப்பு வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார். 

கடந்த அதிமுக ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் தொடர் தற்கொலை நடைபெற்று வந்தது. அது தற்போதும் தொடர்கிறது. கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் அதற்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று முதல் நான்கு வார கால அவகாசம் வேண்டும் என ஆளுநர் கேட்டிருந்தார். தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தது. 40 நாட்களுக்கு மேலாகியும் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை, ஆளுநர் ஓப்புதல் வழங்காத நிலையிலும் தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட்டது.

அந்தவகையில் அரசு கல்லூரி மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் பலனடைந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்க்ளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செல்லும் என தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் இந்நிலையில் தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த தீர்ப்பை வரவேற்றார். மருத்துவ மற்றும் தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை அடிப்படையிலான ஒதுக்கீடு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அவர் பேசினார், 2020-2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 70 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற் படிப்புகளிலும் இதே போன்ற இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன், அதனடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த குழு கொடுத்த அறிக்கையின்படி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில்தான் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு இருதரப்பு வாதங்களும் முடிவுற்று, நமக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது என அவர் கூறினார். திமுக அரசின் 10 மாதகால ஆட்சிக்கும், சமூகநீதிக்கான சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மூன்றாவது வெற்றி இது என்றும் முதல்வர் பேசினார். இந்நிலையில் இதுகுறுத்து அதிமுக தரப்பு வழக்கறிஞர் பாபு முருகவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசாணையை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

எந்த மாநில அரசும் செய்ய துணியாத அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமல்படுத்தினர். அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் நியாயத்தை வாங்கி கொடுத்தது அதிமுக தான். இதில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.