பொதுவெளியில் புரட்சி நடத்தி வரும் கனிமொழியை திமுக உண்மையில் ஒதுக்கி ஓரம் கட்டி வருவதாக அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியாகி வருகிறார்கள்.

மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. உள்கட்சி சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் துணை பொதுச்செயலாளர்களாக இருந்து வரும் நிலையில், மேலும் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய தலைவர்களின் தலையீட்டால் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கும் போட்டியிடாமல் விலகி நின்றதால், ஆ.ராசா, பொன்முடி ஆகியோருக்கு புதிய பொறுப்புகள் தரப்பட்டதாக தி.மு.க.வில் அதிருப்தியில் இருந்தவர்கள் கூறி வருகின்றனர். நீண்ட காலத்திற்கு பிறகு தி.மு.க.வின் முக்கிய பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதால் தலைமை நிம்மதியடைந்தாலும், மகளிர் அணியின் அதிருப்தி அதிகமாகி விட்டது. 

இந்தி எதிர்ப்பு போராட்டம், மும்மொழிக் கொள்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை தி.மு.க. வெறும் தமிழக அளவில் கொண்டு சென்றால், அதனை டெல்லி வரைக்கும் எடுத்துச் சென்று தாக்கத்தை ஏற்படுத்தும் தி.மு.க. தலைவர்களில் கனிமொழி ஒருவரே என்னும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அண்மையில் விமான நிலையத்தில் தனக்கு இந்தி தெரியாததால் இந்தியனா..? என அதிகாரிகள் கேட்டதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டது இந்திய அளவில் பேசப்பட்டது. இதற்காக, அவருக்கு ஆதரவுகளும் குவிந்தன.

இப்படி, ஒவ்வொரு விவகாரத்தையும் தேசிய அளவில் எடுத்துச் சென்று தி.மு.க.விற்கு பெயர் பெற்றுத் தரும் கனிமொழியை, இன்னும் கட்சியின் உயர் பதவியில் அமரச் செய்யாதது ஏன்..? என்பதே மகளிர் அணியின் கேள்வியாக உள்ளது. மேலும், மகன் உதயநிதிக்காக தங்கை கனிமொழியை ஸ்டாலின் ஓரங்கட்டி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கடுகடுத்து வருகின்றனர்.