”2011 உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது 10 மாநகராட்சிகளில் 17 மாநகராட்சி கவுன்சிலர் இடங்களை வென்றோம். மேலும் 50 இடங்களில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் பலம் மற்றும் உள்ளூர் தலைவர்களின் செல்வாக்கு போன்றவற்றை கருத்தில்கொண்டுதான் இடப்பகிர்வை திமுகவிடம் எதிர்பார்க்கிறோம்”

திமுக கூட்டணியில் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், திமுக நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை என்று கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜரூராக நடைபெற்று வருகின்றன. தனித்து போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கிவிட்டன. கூட்டணியாகப் போட்டியிடும் அதிமுகவும் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. திமுக தலைமை மாவட்ட அளவில் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து, இன்றுக்குள் திமுக வேட்பாளர் பட்டியலை கட்சிக்கு அனுப்ப வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நிறையடையவில்லை.

பிப்ரவரி 4-ஆம் தேதியோடு வேட்பு மனுத்தாக்கல் முடிவடைவதால், நேற்று முழுவதும் திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. கவுரவமாக இடப்பங்கீடு இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. மாவட்ட நிர்வாகிகள் இணக்கமாகவும் சுமூகமாகவும் கூட்டணி கட்சிகளின் விருப்பங்களை நிவர்த்தி செய்வார்கள் என்று கூட்டனி கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதோடு கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி அடையாதவண்ணம் இடப் பகிர்வை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். 

ஆனால், பெரும்பாலான இடங்களில் இடப்பகிர்வு இறுதி செய்ய முடியாத அளவில், கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை வழங்க திமுக முன் வரவில்லை என்றும், தங்கள் கோரிக்கையைக்கூட பரிசீலிக்கவில்லை என்றும் கூட்டணி கட்சியினர் புலம்புகிறார்கள். இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், “ஒவ்வொரு உள்ளாட்சியிலும் குறைந்தபட்சம் 15 சதவீத இடங்களையாவது பெற வேண்டும் என்றும் அதற்கேற்ப திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மாநில தலைமை அறிவுறுதியிருந்தது. ஆனால், எங்கள் கோரிக்கைகளுக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் செவி சாய்க்கவில்லை. திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் சொற்ப எண்ணிக்கையில்தான் இடங்களை ஒதுக்குகிறார்கள்” என்று காங்கிரஸ் முகாமில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

மேலும் காங்கிரஸ் தரப்பில் இன்னொரு விஷயத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார்கள். ”2011 உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது 10 மாநகராட்சிகளில் 17 மாநகராட்சி கவுன்சிலர் இடங்களை வென்றோம். மேலும் 50 இடங்களில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் பலம் மற்றும் உள்ளூர் தலைவர்களின் செல்வாக்கு போன்றவற்றை கருத்தில்கொண்டுதான் இடப்பகிர்வை திமுகவிடம் எதிர்பார்க்கிறோம்” என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதேவேளையில் 10 சதவீத இடங்களையாவது ஒவ்வொரு உள்ளாட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், திமுக தரப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாக ஒதுக்க முன்வருவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு நிற்கிறது. திண்டுக்கல்லில் மட்டும் திமுக - காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பிற இடங்களில் பேச்சுவார்த்தை தொங்கலில் உள்ளது.

விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் திமுக அளிக்க முன் வரும் இடங்களோடு கூடுதலாக சில வார்டுகளை எதிர்பார்க்கின்றன. இன்றுக்குள் வேட்பாளர் பட்டியலை மேலிடத்துக்கு அளிக்கும் நிலையில் திமுக உள்ள நிலையில், இன்று கூட்டணி கட்சிகளை சரிக்கட்டி பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.