Asianet News TamilAsianet News Tamil

அரசு கஜானா மூலம் திரவியம் தேடுவதா.? தீயநோக்கத்தில் உருவான பாரத்நெட் திட்டம்.. அமைச்சரை விளாசிய ஐ.பெரியசாமி!

எங்கள் தலைவர் ‘பாரத்நெட்’ திட்ட முறைகேடுகள் குறித்து அறிக்கை விட்டபோதெல்லாம் - அமைச்சர் பதில் அளித்திருப்பது உண்மைதான். ஆனால் அந்த பதில்கள் எப்படியிருக்கிறது? “அந்த வாழைப்பழம்தான் அண்ணே இந்த வாழைப்பழம்” என்ற பிரபலமான “கவுண்டமணி - செந்தில்” காமெடியை மிஞ்சும் அளவில் அல்லவா இருக்கிறது?
 

DMK Deputy General Secretary I.Periyasamy  attacked Minister R.B.Udayakumar
Author
Chennai, First Published May 5, 2020, 8:45 PM IST

 ‘பாரத்நெட்’ டெண்டரின் ஒட்டுமொத்தக் குழப்பமும் - முறைகேடுகளும் – அரசு கஜானா மூலம் ‘திரவியம்’ தேட வேண்டும் என்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தீய நோக்கத்தில் உருவானதே என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி விமர்சனம் செய்துள்ளார்.

DMK Deputy General Secretary I.Periyasamy  attacked Minister R.B.Udayakumar
இதுதொடர்பாக ஐ. பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க. அரசின் ரூ.1,851 கோடி ரூபாய் ‘பாரத்நெட்’ திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  ‘முழுப்பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முயற்சித்திருப்பது’ வேடிக்கையாகவும் - வெட்கத்தை விட்டு அவர் மனதிற்குள்ளே சிரித்துக் கொள்வதை வெளிப்படுத்துவது போலவும் அமைந்திருக்கிறது. “மார்ச் 2021-க்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”என்று மத்திய அரசு கூறியிருக்கிறது என்று ஒரு “நொண்டிச் சாக்கு” கூறியிருக்கிறார் அமைச்சர். இதுவரை எத்தனை டெண்டர்களில் இப்படி காலக்கெடுவைக் கடைப்பிடித்திருக்கிறார் அமைச்சர்?
இந்தத் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 110-வது விதியின் கீழ் 14.9.2015 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அன்றிலிருந்து இன்றுவரை 4 வருடங்கள் 6 மாதங்கள் ஓடி விட்டன. ஏறக்குறைய 50 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது ஊரடங்கு நேரத்தில் ‘பிழை திருத்தப் பட்டியலை’ அவசர அவசரமாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசின் கெடு என்பதைவிட, இந்த டெண்டரில் ஒளிந்திருப்பது, அமைச்சர் தனது ‘நாற்காலி’யை விட்டுப் போகும் முன்பு இந்தத் திட்டத்தில் எவ்வளவு கொள்ளையடிக்க முடியும் என்ற ரகசிய நோக்கம்தானே! அதுதானே உண்மை!

DMK Deputy General Secretary I.Periyasamy  attacked Minister R.B.Udayakumar
 ‘பாரத்நெட்’ டெண்டரின் ஒட்டுமொத்தக் குழப்பமும் - முறைகேடுகளும் – அரசு கஜானா மூலம் ‘திரவியம்’ தேட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் உருவானதுதானே! அமைச்சர் உதயகுமார் இதை இல்லையென்று மறுக்க முடியுமா? எங்கள் கழகத் தலைவர் மத்திய அரசின் கடிதத்தில் உள்ள - அதுவும் ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி தரும் விவரங்களை தனது அறிக்கையில் விரிவாக கூறியிருக்கிறார். மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, தமிழக அரசு தலைமைச் செயலாளர் மற்றும் டான்பிநெட் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு எழுதியுள்ள 30.4.2020-ம் தேதியிட்ட அந்த கடிதத்தின் பத்தி 5-ல் “புகாரின் மீது மத்திய அரசின் மூன்று துறைச் செயலாளர்கள் தலைமையிலான கமிட்டி முடிவு எடுக்கும் வரை டெண்டரை முடிவு செய்யக்கூடாது” (It may be noted that the subject procurement will not be finalized till the aforesaid grievance is disposed off by the Competent Authority) என்று மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DMK Deputy General Secretary I.Periyasamy  attacked Minister R.B.Udayakumar
ஒருவேளை டெண்டரை மூடியிருக்கும் ‘ஊழல் மேகம்’மறைப்பதால் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருக்கு கடிதத்தின் அர்த்தம் புரியாமல் இருக்கலாம். மாநிலத் தலைமைச் செயலாளரையோ அல்லது அமைச்சரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஊரடங்கு நேரமான 15.4.2020 அன்று ‘பிழை திருத்தப் பட்டியல்’ வெளியிட்ட தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரையோ கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே? கடிதத்தில் உள்ள வாசகங்களின் அர்த்தமே தெரியாமல், “பாரத்நெட் திட்டத்திற்கு தடை விதிக்கவில்லை” என்று அமைச்சர்  ‘கோயபல்ஸ்’ பாணியில் கூறியிருப்பதைப் பார்த்தால் “பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லுங்கள்” என்று எங்கள் கழகத் தலைவர் அடிக்கடி அ.தி.மு.க அமைச்சர்களைப் பார்த்துச் சொல்லும் கூற்றுதான் என் நினைவுக்கு இப்போது வருகிறது.
அமைச்சர் உதயகுமார் சொல்வது போல் இந்த டெண்டரில் ஒன்றுமே நடக்கவில்லை என்றால், “விரிவான அறிக்கையை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம்” என்று “பொய்யுரைக்கு” இடையிலும் ஒரு மெய்யுரையை தனது அறிக்கையில் நிகழ்த்தியிருப்பது ஏன்? எங்கள் தலைவர் ‘பாரத்நெட்’ திட்ட முறைகேடுகள் குறித்து அறிக்கை விட்டபோதெல்லாம் - அமைச்சர் பதில் அளித்திருப்பது உண்மைதான். ஆனால் அந்த பதில்கள் எப்படியிருக்கிறது? “அந்த வாழைப்பழம்தான் அண்ணே இந்த வாழைப்பழம்” என்ற பிரபலமான “கவுண்டமணி - செந்தில்” காமெடியை மிஞ்சும் அளவில் அல்லவா இருக்கிறது?DMK Deputy General Secretary I.Periyasamy  attacked Minister R.B.Udayakumar
“கமிஷன் – கரெப்ஷன் - கலெக்ஷன்” மோகத்தில் இருக்கும் அமைச்சர் “காமெடி” அடிக்கலாம். “அண்ணாவின் வழியில் எடப்பாடி” “கரிகால் சோழனுக்குப் பிறகு எடப்பாடி” “உலகின் எட்டாவது அதிசயம் எடப்பாடி” என்றெல்லாம் தன் கற்பனைக்கு எட்டியவாறு எல்லாம் மேடைகளில் புகழலாம். ஆனால், பாரத்நெட் திட்டத்திற்கு “எழுத்து பூர்வமாக – மத்திய அரசு முத்திரையுடன் உள்ள கடிதத்தில் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நிச்சயம் அவரால் மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. அப்படிச் செய்ய நினைத்தால் “முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட”கதையாகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios