திமுக முன்னாள் அமைச்சர்கள் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்பு உள்ளிட்ட 83 வழக்குகள் உள்ளன என புள்ளி விவரத்துடன் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ளார்.

சென்னை, ராஜ்பவனில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று சந்தித்து அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலைக் கொடுத்தார். இந்நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்  சி.வி.சண்முகம்;- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆளுநரிடம் 98 பக்க ஊழல் பட்டியலை கொடுத்துள்ளார். இது புதிதாக சொல்லப்பட்ட புகார் அல்ல. 

அதிமுக என்று ஆட்சி பொறுப்பை ஏற்றதோ அன்றிலிருந்தே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். எவ்வித ஆதாரமும் இல்லாமல் மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். குறிப்பாக முதல்வர் மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் உச்சநீதிமன்றமே இடைக்கால தடை விதித்துள்ளது. முதல்வர் மீதான குற்றச்சாட்டு வழக்கில், ஒப்பந்தத்தில் கலந்துகொண்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. அதிமுக எதிரியான திமுக தொடுத்த வழக்கு. . அரசியலில் நேர் எதிராக உள்ள கட்சிகள் அரசியலுக்காக வழக்கு தொடுக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பே உள்ளது.

பாரத் நெட் டெண்டரில் ரூ.1,950 கோடி ஊழல் என்கிறார்கள். நடக்காத டெண்டரில் எப்படி ஊழல் செய்ய முடியும். அது குளோபல் டெண்டர். அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். துணை முதல்வர் மகன் கார் வாங்கியது குறித்து புகார் அளித்துள்ளனர். அன்று உதயநிதி ஹம்மர் காரை ஸ்டாலின் வீட்டு முகவரியில் வாங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக காங்கிரஸ் அரசு காரை பறிமுதல் செய்தது. பின்னர் அவ்வழக்கு மூடிமறைக்கப்பட்டது. 

திமுக எம்எல்ஏ, எம்.பி. என வழக்கு உள்ளவர்கள் பட்டியலைச் சொல்கிறேன். விசாரணையில் உள்ள 368 வழக்குகளில் முன்னாள் திமுக அமைச்சர்கள் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்குகள் உள்ளன. ஐ.பெரியசாமி, மு.க.அழகிரி, துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி, ஏ.வ.வேலு, உள்ளிட்டோர் மீது 15 வழக்குகள், அதில் பல அவமதிப்பு வழக்குகள். இப்படி முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன. திமுகவின் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை. 

ஊழல் என்ற பெயரை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் கருணாநிதி. திமுகவினருக்கு தைரியம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம் இந்த சலசலப்பிற்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என தெரிவித்துள்ளார்.