பிரச்சனைக்கெல்லாம் காரணம் 'ஜோதிமணி தான்..' உட்கட்சியிலேயே "ஆப்பு" வைக்கும் சீனியர்.. கரூர் பரபரப்பு !!
‘திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பிரச்சனைக்கு எல்லா காரணமும் ஜோதிமணி எம்பி தான்’ என்று காட்டமான அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் கரூர் மாவட்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் வார்டுகளை ஒதுக்கீடு செய்துவருகின்றன. கரூர் மாவட்டத்தில் வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தையானது மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி ஜோதிமணி, காங்கிரஸின் கரூர் மாவட்டச் செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர்கள் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் சின்னசாமியிடம் மட்டுமே பேசியதாகவும், ஜோதிமணியிடம் பேசவில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், ஜோதிமணியிடம் கலந்தாலோசிக்காமல் வார்டுகளை ஒதுக்கீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை ஜோதிமணி கேள்வியாக எழுப்பியப்போது, திமுக நிர்வாகி ஒருவர், ‘நீங்கள் பேசுவதென்றால் வெளியே சென்று பேசுங்கள்’ என்று கூற, அதிருப்தி அடைந்த ஜோதிமணி, கூட்டத்தில் இருந்து வெளியேறியதோடு, "ஆலோசனையில் கலந்துகொள்ள வந்த என்னை எப்படி வெளியேறச் சொல்லலாம்? இவர்களுக்குதான் மரியாதை இல்லாமல் பேசத் தெரியுமா?
நான் பேச எவ்வளவு நேரமாகும். நான் இவர்கள் வீட்டு விஷேசத்திற்கு வந்திருக்கிறேனா, வெளியே போக சொல்வதற்கு. இவர் என்ன வேண்டுமென்றாலும் பேசுவாரா?" என்று ஆவேசமாக சத்தமிட்டுக் கொண்டே வெளியே வந்தார். இந்தச் சம்பவத்தால் கரூர் கலைஞர் அறிவாலயம் சிறிதுநேரம் பரபரப்பானது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘கரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு இடங்கள் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் கொடுத்த பட்டியல் மற்றும் நாங்கள் கொடுத்த பட்டியல் என ஆலோசித்து இன்னும் போட்டியிடும் இடங்கள் இறுதி செய்யப்படவில்லை.
3 நாட்களாக காங்கிரஸ் மாவட்ட தலைவரிடம் இடங்கள் குறித்து பேசப்பட்டது. அவர்கள் தரப்பில் பொது வார்டுகளை கேட்கிறார்கள். சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன. தலைமையிடம் இது குறித்து நாங்கள் பேசி இருக்கிறோம். ஜோதிமணி புகார் குறித்து தற்சமயம் பேச விரும்பவில்லை. எங்கள் தலைமையில் இருந்து காங்கிரஸ் தலைமையிடம் பேசி உள்ளனர். விரைவில் சுமூக உடன்படிக்கை ஏற்படும்.
கூட்டணியில் தேவையில்லாத சங்கடங்கள் வருவதை நாங்கள் விரும்பவில்லை.காங்கிரஸ் தவிர கரூரில் மற்ற கூட்டணி கட்சியினருடன் சுமூகமாக பேசி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் வேட்பாளர் பட்டியல் தலைமையின் ஒப்புதலுடன் வெளிவரும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். இந்நிலையில் மாநில காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினரும், கரூர் மாவட்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினருமான குளித்தலை என். பிரபாகர் கண்டன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கட்சியின் பலத்தோடு தேர்தலை சந்தித்து 95% தோல்வியை சந்தித்தது முழு காரணம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணியும், அனுபவமில்லாத மாவட்ட தலைவர் சின்னசாமியின் தான் காரணம். ஏற்கனவே இவர்களின் செயல்பாடுகளால் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறினர்.
தற்போது நகராட்சித் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மாவட்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்பட்டு நகராட்சித் தேர்தலில் தோல்வியைத் தேடித் தர முயற்சிக்கிறார். ஜோதிமணி தனிப்பட்ட முறையில் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மேலுள்ள காழ்ப்புணர்ச்சியுடன் அவரை ஒருமையில் பேசி அநாகரீகமாக நடந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் மீதும் திமுகவின் மீதும் பழி போடுகிறார்.
மேலும், தேர்தலில் பின்வரும் விளைவுகளுக்கு ஜோதிமணியே பொறுப்பேற்க வேண்டும் என காட்டமான அறிக்கையினை வெளியிட்டு இருக்கிறார். திமுக - காங்கிரஸ் என்று கிளம்பியிருக்கும் இந்த பிரச்சனை, இப்போது ஜோதிமணி எம்பிக்கு எதிராக உட்கட்சியிலேயே பூசல் ஏற்பட்டிருப்பது ஜோதிமணி ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.