திமுக கழக கொள்கைப்பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 

இது குறித்து க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் கழக கட்டுப்பாட்டையும் கழகத்திற்காக ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி உள்ளனர்’’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவில் இருந்து கொள்கைப்பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களவை தேர்தலின் போது குடியாத்தம் தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தரவில்லை என்கிற குற்ற்சாட்டு அவர் மீது எழுந்தது. அதேபோல் அவர்  கட்சிக்காரர்களை அனுசரித்துப்போகவில்லை. கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. நிர்வாகிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

 

இதுகுறித்து தலைமை வரை அவருக்கு எதிராக புகார்கள் குவிந்ததால் குடியாத்தம் குமரன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதாக கூறுகின்றனர்.