துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தனித்தொகுதியில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.  இதில் போட்டியிடும் தி.மு.க.,வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் மே 1 மற்றும் 2 ஆம்  தேதிகளில் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒரு நாள் முன்னதாகவே துாத்துக்குடிக்கு விமானத்தில் வந்த மு.க.ஸ்டாலின்  திருநெல்வேலி சாலையில் உள்ள சத்யா விடுதியில் தங்கியுள்ளார். 

இதையடுத்து இன்று மாலையில்,ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டா பாறை, கீழத் தட்டா பாறை, வடக்கு சிலுக்கன்பட்டி, செக்காரக் குடி ஆகிய கிராமப் பகுதிகளில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கிருந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்ததோடு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஸ்டாலினின் இந்த அணுகுமுறை அப்பகுதி கிராம மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஸ்டாலினுடன் மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி, மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு, மகேஷ் அன்பில் பொய்யாமொழி 
உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். .