*தமிழகத்தில் கோயில்களில் தமிழுக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும்! என தமிழ் துறை சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். அனைத்து கோயில்களிலும் தமிழ் இருக்க வேண்டும்! என்பது அரசின் கொள்கை முடிவு. ஆனால் இன்னொரு மொழி இருக்க கூடாது என்பதில் எங்களுக்கு விருப்பம் கிடையாது. சமஸ்கிருதத்தில் வழிபாடு இருக்கும் இடங்களில், அதை மாற்றி தமிழில் இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. இரண்டு மொழியுமே இருக்கும் என்பதே அரசின் நிலைப்பாரு. -  பாண்டியராஜன் (தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர்)

*பிரேக்கிங் நியூஸ்! எனப்படும் செய்திகளை முதலில் அளிக்கும் பிணியால் ஊடகங்கள் பீடிக்கப்பட்டுள்ளன. இதனால் கட்டுப்பாடு, பொறுப்பு எனும் பத்திரிக்கை  தர்மத்தின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டுள்ளன. ஒரு தரமான செய்தியை வெளியிடும் முன், என்ன? ஏன்? எங்கு? யாரால்? என்ற கேள்விகளை எழுப்பிப் பார்க்க வேண்டும். ஒரு பத்திரிக்கையாளர் என்பவர் பல பாத்திரங்களை ஏற்க வேண்டும். -ராம்நாத் கோவிந்த் (இந்திய ஜனாதிபதி)

*மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ ஆகிய திட்டங்கள் தி.மு.க.வின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டி, சட்டசபையில் கிழி கிழியென கிழித்தனர். மக்கள் விரும்பும் விஷயங்களுக்கு தமிழக அரசின் ஆதரவு உண்டு. மக்கள் விரும்பாத விஷயங்களுக்கு நிச்சயம் ஆதரவு கிடையாது. - ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர்)


*சென்னையில் தங்கியிருந்த துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, திரிசூலம் புறநகர் மின்சார ரயில் நிலையம் சென்றார். அங்கிருந்து தனி சிறப்பு ரயிலில், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் தனி உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ரயிலில் சென்றனர். -பத்திரிக்கை செய்தி

*காவிரி படுகை மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மூன்று ஆண்டுகளாக பொதுமக்களும், விவசாயிகளும் போராடி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது மத்திய அரசோ, ஹைடோர் கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்து கேட்பது தேவையற்றது! என ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இது மோடி அரசின் எதேச்சதிகார போக்கை காட்டுகிறது. - வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)

*தமிழக முதல்வர் ஒரு விவசாயி போல வயல்வெளிகளில் இறங்கி வேலை பார்த்ததை டி.வி.யில் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ‘நான் ஒரு விவசாயி’ என கூறி, தான் வந்த வழியை பெருமையாக பேசும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது பாராட்டுக்கள். -வெங்கய்யா நாயுடு (துணை ஜனாதிபதி)

*உள்ளாட்சி தேர்தலில் விதைக்காமலேயே அறுவடை செய்தது எங்களின் தி.மு.க. கூட்டணி. உண்மையிலேயே வெற்றி பெற்றது நாங்கள்தான். தேர்தல் வெற்றிக்காக எந்த பணியும் செய்யவில்லை. ஆனால் அ.தி.மு.க. பெற்ற வெற்றியெல்லாம் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் கிடைத்தவை. -திருமாவளவன் (வி.சி.க. தலைவர்)

*தமிழகத்தில் இலக்கியங்களை வாசிப்போர் மிக சிலரே. சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் ஒரு நாள் வாங்கும் சம்பளத்தை, எழுத்தாளர்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க முடியாத நிலைதான் காணப்படுகிறது. எழுத்துக்கு அந்தளவுக்குதான் மதிப்பிருக்கிறது. -தங்கர் பச்சான் (சினிமா இயக்குநர்)

*ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்! என முதன்முதலில் கூறிய, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அது பற்றி விசாரிக்க ஆறுமுறை விசாரணை ஆணையம் அழைத்தும் ஒரு முறை கூட செல்லவில்லை. ஜெ., மரணத்துக்கு காரணமானவர்களுடன் அவர் கைகோர்த்துள்ளார். இந்த வழக்கும், பொள்ளாச்சியில் அளுங்கட்சியினர் மற்றும் போலீஸார் துணையோடு எட்டு ஆண்டுகளாக 250 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை விவகாரத்தில் சில உயிர்கள் பறிபோயுள்ளன. எனவே தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் இந்த மூன்று விவகாரங்களை விசாரிப்பதைத்தான் முதல் வேலையாக செய்வோம். 
-மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)


: