DMK Chief Secretary Durai Murugan interviewed
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக யார் போராடினாலும், அதைப்பற்றி அரசுக்கு கவலை இல்லை என்றும், பாஜக செயல்படும் நிலையிலேயே இல்லை ஆனால் அவர்கள் பேச்சு மட்டும் குறையில்லை என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.
மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். முன்னதாக கோவை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய துரைமுருகன், தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்த காஞ்சி விஜயேந்திரருக்கு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது உள்ளத்திலும் உணர்விலும் வலு இல்லாமல் போனது ஏன்? இதற்கு காஞ்சி சங்கர மடம் தரும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தமிழுக்கு காஞ்சி மட விஜயேந்திரர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான்.
ரஜினிகாந்த், கமல் ஹாசனின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், சினிமாவைவிட அரசியல் கவர்ச்சியாக இருப்பதால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அரசியலுக்கு வந்த பின்னர், பொதுமக்கள் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை வைத்துதான் கூற முடியும். அதே நேரத்தில் யாரும் இன்னும் தெருவிற்கு வரவில்லை. தாழ்வாரத்தில்தான் நிற்கின்றனர். அவர்கள் மக்களோடு
இணைந்தால்தான் முழுழ அரசியல்வாதி ஆக முடியும் என்றார்.
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள், மக்கள், அரசியல் கட்சிகள் என யார் போராடினாலும், அதைப்பற்றி அரசுக்கு கவலை இல்லை. எவ்வளவு சுருட்டலாம், கொள்ளையடிக்கலாம் என்பதிலேயே அவர்கள் கவனமாக இருக்கின்றனர். பாஜக ஒரு மாதிரியான கட்சி. அது செயல்படும் நிலையிலேயே இல்லை. ஆனால், அவர்கள் பேச்சு மட்டும் குறையில்லை.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அமைச்சர்களுக்கு தற்போது தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு நடந்து கொள்கிறார்கள். தில்லியில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு பொம்மலாட்டம் ஆடி வருகிறார்கள். இது எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை என துரைமுருகன் கூறினார்.
ஒரு அமைச்சர், சட்டப்பேரவையிலேயே உடைச்ச கடலை சாப்பிடுகிறார். இன்னொருவர் தெர்மகோலை வைத்து சுற்றி வருகிறார். செல்லூர் ராஜூ எல்லாம் பெரிய அறிஞர்... சட்டப்பேரவையில உட்கார முடியல சார். நாங்க எந்த கேள்வி கேட்டாலும், அதற்குரிய பதிலை யாரும தருவதில்லை. விரைவில் சூழ்நிலைகள் மாறும். திமுவுக்கு தலைமை ஏற்க ஸ்டாலின் மட்டுமே முடியும் என்று துரைமுருகன் தெரிவித்தார்.
