திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், திருப்பனந்தாள் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான ரவிச்சந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர், அருகே முள்ளுக்குடியைச் சேர்ந்தவர் 60 வயதான் கோ.ரவிச்சந்திரன். இவர் 25 ஆண்டுக்களுக்கும் மேலாக திருப்பனந்தாள் ஒன்றிய குழு தலைவராகவும், திமுகவின் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இப்பகுதிகளில் திமுக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். மேலும் திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார். திமுக தலைமையும் இவர் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தது. தற்போது திருப்பனந்தாள் ஒன்றிய குழு தலைவராக இவரது மனைவி தேவி ரவிச்சந்திரன் பொறுப்பில் உள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள முள்ளுகுடி பகுதியில் நடைபெறுகிறது. மேலும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறப்பு செய்தி இப்பகுதியில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த டெல்டாப் பகுதி திமுகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.