மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க 3 பேர் குழுவை அமைத்து மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக பாஜக உச்ச நீதிமன்றம் செல்லக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் கோரிவருகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசு இதில் என்ன முடிவை எடுக்கும் என்பதில் சஸ்பென்ஸ் நீடித்துவருகிறது. 
இந்நிலையில் இடஒதுக்கீடு தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசோ இந்திய மருத்துவ கவுன்சிலோ மேல்முறையீடு செய்தால், தங்களை அதில் எதிர் தரப்பாக சேர்க்க வேண்டும். எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல், எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.