தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் திமுக  மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தென்சென்னை வடக்கு, மேற்கு மாவட்டம் திநகர் பகுதியில் தேர்தல் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:  அதிமுக அரசு தமிழக மக்களுக்காகவும், தமிழக நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 

பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே தமிழகமே முன்னணி மாநிலமாக உள்ளது. தொடர்ந்து மத்திய அரசின் விருதுகளை தமிழகம் வாங்கிக் குவித்து வருகிறது.  கொரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கொரோனா  நோய் தொற்றை தடுப்பதில் தமிழகமே முன்னணியில்  உள்ளது. அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பார்த்து பார்த்து ஒவ்வொரு திட்டங்களாக கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறார்கள். 

அதிமுக ஆட்சியின் சாதனைகளைக் கண்டு ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை, எனவே இந்த அரசின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. மக்களுக்கு நன்மை செய்யும் ஒரே இயக்கம் அதிமுக தான் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் எப்போதும் அதிமுகவில் பக்கம் இருக்கிறார்கள், திமுக இன்னொருமுறை ஆட்சிக்கு வர முடியாது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.