திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் சகோதரியும் திமுக எம்.பி.யுமான கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் வன்முறை வெடித்து பல உயிர்கள் பறிபோனது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக மகளிர் அணி செயலாளர் எம்.பி கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி விடுத்துள்ள அறிக்கையில்;- அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரான குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு அதை எதிர்த்து மாணவர்களும், பொதுமக்களும், சில அரசியல் இயக்கங்களும் நாடு முழுவதும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் பற்றி எரிகிறது.

இந்த சூழ்நிலையில் எனது பிறந்தநாளை கொண்டாட தேவையில்லை. அநீதி வீழும், அறம் வெல்லும் என்ற கருணாநிதியின் வார்த்தைகளை நெஞ்சில் நிறுத்தி மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு ஜனநாயகம் காக்க தொடர்ந்து போராடுவோம் என கனிமொழி கூறியுள்ளார்.