துரைமுருகன் மகனிடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தியதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தரப்பு டென்ஷனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சனிக்கிழமை சோதனை முடிவுற்ற நிலையில் துரைமுருகன் வீட்டிலிருந்து பத்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மட்டுமே சிக்கியதாக தேர்தல் ஆணைய தரப்பு தெரிவித்தது. ஆனால் தன் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டுச் சென்றதாக துரைமுருகன் கூறியிருந்தார். 

சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன் நான் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சமாட்டேன் என்று வீர வசனம் எல்லாம் பேசினார். இதற்கு காரணம் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை என்கிற துணிச்சல்தான் என்று கூறப்பட்டது. ஆனால் திமுகவின் தேர்தல் வியூகம் தொடர்பான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதே துரைமுருகன் ரகசியமாக வைத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் ஸ்டாலின் தரப்பு தொடர்ந்து நெருக்கடி கொடுத்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் வருமானவரித்துறையினர் அள்ளிச்சென்ற ஆவணங்கள் குறித்த விவரத்தை துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சியில் இருந்த நிலையில் புதிய அதிர்ச்சியாக திங்கட்கிழமை காலை தேர்தல் பறக்கும் படையுடன் காட்பாடி அருகே உள்ள துரைமுருகனின் நண்பர் வீட்டிற்குள்ளும் குடோனுக்கு உள்ளும் புகுந்தது வருமான வரித்துறை. 

அதோடு மட்டுமல்லாமல் பெட்டி பெட்டியாக வும் மூட்டை மூட்டையாகவும் குவித்து வைக்கப்பட்டு இருந்த பணத்தை அள்ளிச் சென்றது வருமானவரித்துறை. கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணி முடிக்கவே வருமான வரித்துறைக்கு பல மணி நேரம் தேவைப்பட்டது. கடந்த 29ஆம் தேதி துரைமுருகன் வீட்டுக்குள் வருமான வரித்துறை நுழைந்த போது அவருக்கு சொந்தமான கல்லூரிகள் வைக்கப்பட்டிருந்த பணம்தான் அவரது நண்பர் சீனிவாசன் குடோனுக்கு மாற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பு தகவல் வெளியிட்டதுடன் ஆதாரமாக வீடியோவையும் கசிய விட்டது. தொடர்ந்து வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்தம் விசாரணை வளையத்திற்குள் இழுத்துச் சென்றது வருமானவரித்துறை. 

பணம் இருந்ததாகக் கூறப்பட்ட கல்லூரியில் வைத்து கதிர் ஆனந்திடம் பல மணி நேரம் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனால் கதிர் ஆனந்த் பிரச்சாரத்திற்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வருமான வரித்துறை விசாரணை அரசியல் என்பதெல்லாம் துரைமுருகனின் மகனுக்கு புதிது என்று சொல்கிறார்கள். அதிகாரிகளின் நயமான பேச்சு மற்றும் துல்லியமான விசாரணையை கதிர் ஆனந்த் திறம்பட எதிர்கொள்ளும் நபர் இல்லை என்றும் பேசிக் கொள்கிறார்கள். 

இதனால் திமுக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தும். இந்த நிலையை எல்லாம் அறிந்து தான் ஸ்டாலின் தரப்பு நேற்று காலையில் இருந்தே திக் திக் மனநிலையுடன் மிகுந்த டென்ஷனில் இருப்பதாக கூறுகிறார்கள்.