வாக்கு எண்ணிக்கை மேஜைகளை குறைக்க கூடாது எனவும் மேஜைகளை குறைத்தால் வாக்கு எண்ணிக்கை நேரம்  24 மணி நேரத்தை தாண்டும் எனவும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் பாலகங்கா ,திமுக சார்பில் சேகர்பாபு , கிரிராஜன், பாஜக சார்பில் கரு. நாகராஜன் ,அமமுக சார்பில் செந்தமிழன், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் ,வேட்பாளர்களின் முகவர்களுக்கு வரும் சனி ஞாயிறு தடுப்பூசி போடவும், கொரோனா பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கூறியதாக தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை குழப்பம் இல்லாமல் அமைதியாக நடைபெற வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தி உள்ளோம் எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேஜைகளை அதிகரிக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

கூட்டத்துக்குப் பிறகு திமுக சார்பில் சேகர் பாபு செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், வாக்கு எண்ணிக்கை மேஜைகளை குறைக்க போவதாக தகவல் வருகிறது. இதற்கு திமுக சார்பில் ஆட்சேபனை தெரிவித்து உள்ளோம்.வாக்கு எண்ணிக்கை மேஜைகளை குறைக்க கூடாது. மேஜைகளை குறைத்தால் வாக்கு எண்ணிக்கை நேரம் அதிகரிக்கக்கூடும். 24 மணிநேரம் தாண்டும் அப்படியானால் ஒரே அறையில் இருக்கும் போது நோய்த்தொற்றும் அபாயம் ஏற்படும் இதனால் வாக்கு எண்ணிக்கை மேஜையை குறைக்காமல் திறந்தவெளி அரங்கில் அல்லது கூடுதல் அறையில் தனிநபர் இடைவெளியுடன் வாக்கு எண்ணிக்கையை நடத்தவும் கோரியுள்ளோம் என தெரிவித்தார்.