பாஜவுடன், திமுக பேசுவதாக தமிழிசை சொல்வது பொய் என்றும், அவர் அரசியலில் இன்னும் பக்குவம் அடையவில்லை என்பதையே காட்டுகிறது என்றும் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி; திட்டமிட்டு அதிமுகவும், பாஜவும் இப்படி ஒரு தந்திரத்தை தமிழகத்தில் கையாளுகிறார்கள். 

மேற்கு வங்கத்துக்கு சென்ற மோடி, அங்கு பேசும் போது, ‘மம்தாவிடம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள்’ என்று பேசியது பொய்யான, தவறான தகவலோ, அதை மிஞ்சும் வகையில், எங்களாலும் மோடியை விட அதிகமாக புளுக முடியும் என்று காட்டும் வகையில் தமிழிசை இப்படிப்பட்ட ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

அவர் எந்த நோக்கத்தோடு சொன்னாரோ அது நிச்சயமாக நிறைவேறாது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக சந்திரசேகர ராவை சந்திப்பதற்கு முன்பாகவே தெளிவாக சொல்லிவிட்டார். சந்திரசேகர ராவ் ஒரு கட்சியின் தலைவர், ஒரு மாநிலத்தின் முதல்வர், அவர் தமிழகத்துக்கு வரும் போது தமிழகத்தில் இருக்கிற ஸ்டாலினை சந்திக்க விரும்பினார். அப்படி விரும்பி பார்க்க வேண்டும் என்று சொன்ன போது, மரியாதை நிமித்தம் என்ற அடிப்படையில் ஸ்டாலினை சந்தித்தார். அதன் பிறகு உடனடியாக ஸ்டாலின் அதுபற்றி தெளிவாக சொல்லிவிட்டார்.

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும், அதே நேரத்தில் அவர் எங்களை ஆதரிக்க வேண்டும் தான் கேட்டுக் கொண்டேன் என்பதையும் தெளிவு படுத்திவிட்டார். இதன் பின்னரும் இதை புரிந்து கொள்ளாமல் தமிழிசை பேசியிருப்பது, அவர் அரசியலில் இன்னும் பக்குவம் அடையவில்லை என்பதை காட்டுகிறது. இதனால் எந்தவிதமான குழப்பமும் தமிழக அரசியலில் வராது. திமுகவை பொறுத்தவரை இந்திரா காந்தி கலைஞரை பற்றி அவர் சொல்லும் போது, ‘கலைஞர் யாரை எதிர்த்தாலும் உறுதியாக எதிர்ப்பார். ஆதரித்தாலும் உறுதியாக ஆதரிப்பார் என்று கூறினார்.
 
அவர் வழியில் வந்த ஸ்டாலினை, ராகுல் தான் இந்தியாவின் பிரதமர் என்று முதன்முதலாக அறிவித்துள்ளார். இன்று வரை அதிலிருந்து கடுகளவும் எந்த மாற்றமும் இல்லை. அது உறுதியாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சந்திரபாபு நாயுடுவுக்கும், துரைமுருகனுக்கும் நீண்ட நாட்களாக நட்பு உண்டு. அவர் அரசியல் ரீதியாக அவரை சந்திக்க செல்லவில்லை. 

நட்பு ரீதியாக சென்றிருப்பார். அதேநேரம் சந்திரபாபு நாயுடு எங்களோடு இருப்பவர்தான் அவரை சந்திப்பதில் ஒன்றும் தவறு இல்லை. ஸ்டாலின் தங்கும் விடுதியில் சோதனை நடத்தியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து சோதனை நடத்தட்டும். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. அதனால் பயம் இல்லை. அப்படி நடத்தினால் எங்களுக்கு பத்து ஓட்டு அதிகமாக கிடைக்குமே தவிர குறையாது. இவ்வாறு அவர் கூறினார்.