அரசியல் நாகரீகம் இன்றி பேசி வரும் அமைச்சர் உதயக்குமார் வீட்டை இளைஞர் பட்டாளத்துடன் முற்றுகையிட போவதாக மதுரை திமுகவினர் அறிவித்திருப்பது அதிமுக மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், திமுக தலைவர் ஸ்டாலினை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இலவச சிகிச்சை பெற அழைத்ததாக கூறப்படுகிறது. இது திமுகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன்..., 'ஸ்டாலினை அரசியல் நாகரிகம் இன்றி பேசிய அமைச்சர் உதயகுமாரை கண்டித்து, அவரது வீட்டை ஆயிரம் இளைஞர்களுடன் கருப்புக்கொடி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும், அப்போது ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைப்பார் என்றும் அவர் கூறினார்.