விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக திமுக உடன்பிறப்புகள் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக திமுக உடன்பிறப்புகள் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், திமுகவுக்கும் எப்போதும் ஆகாது. தமது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் திமுகவில் தான் இருந்தார். கட்சியின் தலைமை கழக பேச்சாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்க அதற்கு தலைமை ஒப்புக் கொள்ளாததால் திமுகவில் இருந்து வெளியேறியவர் சீமான் என்று திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான பேராசிரியர் கான்ஸ்டன்டைன் பலமுறை மேடைகளிலும், விவாத அரங்குகளிலும் அழுத்தமாக முன் வைத்துள்ளார்.

இப்படி திமுக எதிர்ப்பு என்பது நாம் தமிழர் கட்சிக்கும் அதன் தொண்டர்களுக்கும் இடையே தொடக்கம் முதலே இருந்து வருகிறது. ஆனால் இதுவரை வாய் பேச்சு, பேட்டி, அறிக்கை என்று இருந்த கட்டம் தடம்மாறி அடிதடி, கைகலப்பு என்று சென்றிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் தொடக்கநிலையாக இருந்தது தருமபுரி மாவட்டம், மொராப்பூரில் நாம் தமிழர் கூட்ட மேடையில் ஏறி திமுகவினர் மைக்கை பிடுங்கி வீசியதுதான். அந்த கூட்டத்தில் திமுக பற்றியும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும் மிக அவதூறாக நாம் தமிழர் கட்சியினர் பேசியதாக தான் காரணம்.

சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் ரிப்பிட்டாக ஓடிக் கொண்டிருக்க, சீமானுக்கு ஆதரவு, திமுகவுக்கு ஆதரவு என பல கட்சிகளும் எதிர்ப்பு, ஆதரவு அரசியலில் களம் இறங்கி இருக்கின்றன. ஒரு கட்சியின் தலைவர், தொண்டர்களை நல்வழிப்படுத்துபவர் கையில் செருப்பை எடுத்து வைத்துக் கொண்டு பேசுவது சரியா? அதற்காக மேடை ஏறி அடிக்க பாய்வதா? என்றும் கருத்துகளும், விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.

இப்படி 2 பக்கமும் சரமாரி கருத்துகள் வந்து விழ, விசிக தலைவர் திருமாவளவனின் சீமான் ஆதரவு பேச்சு திமுகவை கொந்தளிக்க வைத்திருக்கிறது. நாம் தமிழர் Vs திமுக பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசிய ஆதரவு பேச்சு உடன்பிறப்புகளை உசுப்பிவிட்டு உள்ளது.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும், கருத்துக்கு கருத்து தான் சரி. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அரசு உரியமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு சீமான் நன்றி கூறியது ஒரு பக்கம் இருந்தாலும் திருமாவின் இந்த பேட்டியை கண்ட திமுக உடன்பிறப்புகள் கொதித்து போயிருப்பதாக கூறப்படுகிறது.

விசிகவுக்கு எதிராக திமுகவினர் நெகட்டிவ் கருத்துகளை கொண்ட டுவிட்டர் பதிவுகளை பதிவிட்டு உள்ளனர். கடந்த காலங்களில் திமுகவினரையும், கட்சி தலைமைக்கு எதிராக விசிகவினர் பேசிய பிளாஷ்பேக் பேச்சுகளை இணையத்தில் ஓடவிட்டு திருமா கண்டிப்பாரா என்று போட்டு தாக்கி வருகின்றனர்.

நாகரிக அரசியல்வாதியான திருமாவளவன், சீமானின் இந்த பேச்சை ஆதரிக்க வேண்டுமா? அதற்கென்ன கட்டாயம் இருக்கிறது என்கிற தொணியில் உடன்பிறப்புகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

திமுக தொண்டர்களின் இந்த கொதிநிலை கருத்துகள் அனைத்தும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மூலம் திருமாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறதாம். திமுக தலைமையின் பார்வைக்கும் முன் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், திமுகவின் உடன்பிறப்புகள் திருமாவளவன் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர் என்பது மட்டும் உண்மை என்று கூறுகின்றனர் அரசியல் களத்தின் அனைத்து நகர்வுகளையும் அறிந்த அரசியல் விமர்சகர்கள்…!!