குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விமர்சித்துகொண்ட மு.க.ஸ்டாலினும் டாக்டர் ராமதாஸும் தற்போது அக்கட்சிகளின் மூத்த தலைவர்களை வைத்து அறிக்கை போர் நடத்திவருகிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்தில் வாக்களித்த அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஈழத் தமிழர்கள், இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட டாக்டர் ராமதாஸ், ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகங்கள் என்று பட்டியலிட்டார். இதேபோல அன்புமணி ராமதாஸும், தமிழின விரோதி யார் என்ற தலைப்பில் காணொளி வெளியிட்டார். இந்நிலையில் ராமதாஸின் அறிக்கைக்கு டி.ஆர். பாலுவைக் கொண்டு அறிக்கை வெளியிட வைத்தார் மு.க. ஸ்டாலின். அவரும் ராமதாஸை விமர்சித்து காட்டமான அறிக்கை வெளியிட்டார்.
டி.ஆர். பாலுவின் அறிக்கையில், “தமிழினப் போராளி என்று, தனது நெற்றியில் தானே ‘‘ஸ்டிக்கர்’’ ஒட்டிக் கொண்ட பா.ம.க. நிறுவனத் தலைவர், ஈழத்தமிழினத்துக்கும் சிறுபான்மையினருக்கும் இழைத்த மாபெரும் துரோகம், நாட்டு மக்கள் மத்தியில் அம்பலமான அதிர்ச்சியில், மிக நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஏதோ, தன் வாழ்வே ஈழத்தமிழர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது போல், தன் மனதிற்குள் ஒரு கற்பனைக் கோட்டையைக் கட்டிக்கொண்டு, திமுகவையும்  தலைவரையும் விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் வெற்றி பெற்றதற்கு காரணம், அதிமுக அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம். இந்தத் துரோகத்துக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ராமதாஸ், அன்புமணிதான் காரணம். நாடு இன்று பற்றி எரிய இவர்களே காரணம். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணியை காப்பாற்றுவதற்காக சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையைக் காவு கொடுத்துள்ளார் ராமதாஸ்” என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
டாக்டர் ராமதாஸை டி.ஆர். பாலு விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்று அவனது மாளிகைக்கு சென்று சிரித்துப் பேசி விருந்து உண்டு பரிசுப்பெட்டி வாங்கி வந்த எம்.பி.க்கள் கூட்டத்திற்கு தலைமையேற்றதே டி.ஆர்.பாலுதான். அந்த வகையில் தமிழின துரோகத்தில் கருணாநிதிக்கு முதல் வாரிசே இவர்தான்.

 
 ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸைக் காப்பாற்றுவதற்காக ஈழத்தமிழர் உரிமையை ராமதாஸ் காவு கொடுத்து விட்டதாக பாலு பொய் மாலைகளை சூட்டியிருக்கிறார். 2ஜி ஊழலில் முக்கியக் குற்றவாளியான சாகித் பால்வாவை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போதுதான் ஊழல் பணம் கைமாறியது. இது குறித்த விவரங்களை ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா அறிந்திருந்தார். இந்த உண்மைகளை சிபிஐயில் சொல்லி விடுவார் என்பதற்காகத்தான் அவர் தற்கொலை செய்து வைக்கப்பட்டார்" என்று திமுக கூட்டணியிலுள்ள ஒரு தலைவர் கூறினாரே... அதை மறுக்க முடியுமா?
ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுகதான். இந்த விஷயத்தில் ஸ்டாலினுக்காக கம்பு சுழற்றுவதை விடுத்து, இது குறித்து ராமதாஸ் அல்லது அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலினை கெஞ்சி கூத்தாடியாவது டி.ஆர். பாலு அனுப்பி வைக்க வேண்டும்" என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலினும் டாக்டர் ராமதாஸும் விலகிகொள்ள, மூத்த தலைவர்களை இரு கட்சிகளும் களமிறக்கிவிட்டுள்ளன.