dmk and ops palnning to defeat admk says dinakaran
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் அணியினர், அதிமுகவை அரசியல் வியாபாரத்துக்காக பயன்படுத்துகின்றனர். இங்கிருந்து சென்ற சில துரோகிகள், திமுகவுடன் இணைந்து, அதிமுகவை அகற்ற வேண்டும். ஒழிக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனர். பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை பற்றி எனக்க கவலை இல்லை. எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி, ஜெயலலிதா கட்டு கோப்புடன் காப்பாற்றிய கட்சியை காப்பாற்றவே, நான் போட்டியிடுகிறேன். தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறேன். அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன். விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.
திமுகவுடன், ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்து பல சதி திட்டங்களை தீட்டி வருகிறார். அவருக்கு கருணாநிதியுடனும், ஸ்டாலினுடனும் தொடர்பு இருக்கிறது. ஸ்டாலின் மூலம் எங்களது எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு, ஓ.பி.எஸ். அணிக்கு அழைப்பு கொடுக்கிறார்கள்.
ஆனால், எங்களிடம் உள்ள எம்எல்ஏக்கள் விவரம் அறிந்தவர்கள். யாருடன் இருக்க வேண்டும். கட்சி யாரிடம் இருக்கிறது என அறிந்து இருக்கிறார்கள். உண்மையான அதிமுகவினர் எங்களுடன் இருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் ஒரு பசுத்தோல் போர்த்தியவர். அவருடைய எண்ணம் எப்போதும் ஈடேறாது. அவருக்கும், திமுகவினருக்கும் நெருக்கமும், தொடர்பும் இருப்பதை சென்ற மாதம் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோதே தெரிந்துவிட்டது.
ஸ்டாலின் என்ன செய்தார் என்பது உலகமே டிவியில் பார்த்தது. நானும் பார்த்தேன். நீங்களும் பார்த்தீர்கள். வரும் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வத்தின் கூடாரமே காலியாகும். அவர், காணாமல் போய்விடுவார்.

அதிமுக பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது சட்டப்படி செல்லாது என மதுசூதனன் இப்போது கூறுகிறார். அவரும், ஓ.பன்னீர்செல்வமும்தான் முன் மொழிந்து, சசிகலாவை பொது செயலாளராக தேர்வு செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
