மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், தமிழக ஆளும் அதிமுகவிக்கும் இடையே நல்ல உறவு உள்ளது என்றும், பாஜக சொற்படிதான் அதிமுக ஆடுகிறது என்றும் தமிழகத்தில் பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

உதாரணமாக ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்த உதய் மின்திட்டம், ஜிஎஸ்டி, உணவுப் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை இபிஎஸ் அரசு அனுமதித்தது. பாஜக ஆடும் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து அதிமுக செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா அழைக்கப்பட்டதும், பின்னர் நிதின் கட்கரி வந்ததும் திமுக – பாஜக இடையே கூட்டணி என்று பேசப்பட்டது. இதன் பிறகு காட்சிகள் மாறி விட்டதும், புது உறவு பூத்துள்ளது யூகங்கள் எழுந்தன.

அதே நேரத்தில் நாடு முழுவதும் காவி சாயம் பூச நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என பொதுகுழுவில் பேசி ஸ்டாலின் அதற்கு முற்றுப் புள்ளி வைத்தார். 

இந்நிலையில்தான் குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டும்தான் வரலாற்றின் முதல்முறையாக வருமானவரிச் சோதனையில் ராம மோகனராவ் சிக்கியபிறகு தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல்முறையாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சென்னை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு காரணம் திமுக – பாஜக இடையே பூத்துள்ள திடீர் உறவுதான் காரணம் என மக்களவை துணை சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார்.

தம்பிதுரையின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து அரசியல் செய்யும் தம்பிதுரை எதை வைத்து இந்த குற்றச்சாட்டை வைக்கிறார் என கேள்வி எழுந்துள்ளது.