மதரீதியில் மக்களை ஆத்திரப்படுத்தி பிளவுபடுத்தும் சங்பரிவார்.! பாஜகவுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆவேசம்

மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் சங்பரிவார்களின் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு  அவற்றை முறியடிக்க முன்வர வேண்டுமென்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக் கூடாது என்றும் பொது மக்களை கேட்டுக் கொள்வதாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.
 

DMK allies alleged that the Sangh Parivar was planning to divide people on religious lines

பதற்றத்தை ஏற்படுத்த திட்டம்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேச்சுக்கு எதிர்கருத்து, பாஜகவினரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சுஇது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவாளவன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,  அண்மைக் காலமாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில்  பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது கோவையை மையப்படுத்தி இந்த முயற்சிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடைபெற்று வருகின்றன. 

 

ஆத்திமூட்டலுக்கு இரையாகிவிடக்கூடாது

இவற்றிற்கு காரணமான அனைவரையும் காவல்துறை விரைந்து கைது செய்து சிறைப்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் , 'நச்சு அரசியலுக்கு இடமளிக்க வேண்டாமென' தமிழக மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தமிழகத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை வரவேற்கிறோம். அத்துடன் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் சங்பரிவார்களின் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு  அவற்றை முறியடிக்க முன்வர வேண்டுமென்றும், எவ்வித ஆத்திரமூட்டலுக்கும் இரையாகி விடக் கூடாது என்றும் பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்தப்போவதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்திருக்கிறது. காந்தியடிகளை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆர்.எஸ்.எஸ். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். 

DMK allies alleged that the Sangh Parivar was planning to divide people on religious lines

சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி

மேலும் அவர்கள் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதியளிக்கும்படி தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலைத் தந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.இந்நிலையில், சங்பரிவார்களின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் அக்டோபர் 2 அன்று மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடைபெறவுள்ளது. இந்த மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பு, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்றும் முயற்சியின் ஒரு நடவடிக்கையே இது. இதற்கு தமிழக மக்கள் தங்கள் முழு ஆதரவையும் நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழக மக்களிடையே பயமும் பதற்றமும்.. அமைதியை சீர்குலைக்க நினைக்கும் எவனையும் சும்மா விடாதீங்க.. டிடிவி. ஆவேசம்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios