தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இடையே பூர்வாங்கப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில், 10 தொகுதிகள் உறுதியாக வேண்டும் என காங்கிரஸ் திமுகவிடம் வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மமக, இ.யூ.மு.லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாமக சேருமா சேரதா என்ற பட்டிமன்றம் இன்னும் முடிந்த பாடில்லை. இதற்கிடையே திமுக - காங்கிரஸ் இடையே பூர்வாங்கப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, கனிமொழி ஆகியோர் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார்கள். 

திமுக தரப்பில் காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 7 அல்லது 8 தொகுதிகள் வரை வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கியதைபோல 15 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள். அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ்-விசிக என மூன்று கட்சிகள் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிட்டதை நினைவுப்படுத்திய திமுக தரப்பு, தற்போது கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். 

இதனால், காங்கிரஸ் தரப்பில் 2004-ம் ஆண்டைப் போல குறைந்தபட்சம் 10 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவருமே இந்த முறைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார்கள். இதேபோல ஒவ்வொரு கோஷ்டியும் காங்கிரஸ் மேலிடத்திடம் டிக்கெட் கேட்டு வலியுறுத்திவருகிறார்கள். ஒவ்வொரு கோஷ்டிக்கும் ஒரு சீட்டு என்ற அளவிலாவது தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் டி.ஆர். பாலு, கனிமொழியிடம் வலியுறுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸின் நிலைமை அகில இந்திய அளவில் மாறியிருப்பதையும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததையும் கோடிட்டு காட்டிய காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், அதற்கேற்ப தொகுதி பங்கீடு இருப்பதையும் திமுகவிடம் வலியுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பூர்வாங்கப் பேச்சுவார்த்தை என்பதால், காங்கிரஸ் விருப்பதை தலைவர் மு.க. ஸ்டாலினுடம் தொகுதி பங்கீட்டுக் குழுவிடம் தெரிவிப்பதாக திமுக தரப்பு சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. 

காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதை தொகுதி பங்கீட்டுக் குழுவிடம் பேசி ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று திமுக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்பதால், அதற்கு முன்பாக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யவும் திமுக திட்டமிட்டுள்ளது.