அரக்கோணத்தில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு கடும் கண்டனத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணையை காவல் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும். அலட்சியம் கூடாது. குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுவது வேதனையளிக்கிறது. தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணப்படுவதால் இந்த ஒரு மாதத்துக்கு அரசு செயல்படாமல் இருக்கும். இதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும். கொரோனா தடுப்பூசி டோஸ் ஒரு வாரத்துக்கு மேல் இருக்காது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். எல்லாத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தும் மையங்களும் அதிகரிக்கப்பட வேண்டும்.
வேளச்சேரியில் தேர்தல் விதிமீறல் நடந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. யார் வேண்டுமானாலும் வாக்குப்பதிவுப் பெட்டிகளை கையாளலாம் என்றால் தேர்தல் ஆணையம் அலட்சியமாக செயல்படுகிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. இந்தத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். ஆளுங்கட்சியினர் மீது புகார் அளிக்கப்பட்டால், அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்வதாகக் கூறுகிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 
பாஜக போட்டியிடும் தொகுதிகளில் ரூ. 1000 முதல் ரூ.3,000 ரூபாய் வரை வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 170 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைக்கும். தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணியை மக்கள் வெறுக்கிறார்கள்” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.