தி.மு.க கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை சேர்க்க பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க – கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே கூட்டணி பேச்சு நடைபெற்றது. ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில் தி.மு.க கறார் காட்டியதால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தனித்து போட்டியிட்டது. கொங்கு மண்டலத்தில் தங்களுக்கு செல்வாக்கு உள்ள 72 தொகுதிகளை தேர்வு செய்து அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. 

போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். சில தொகுதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு வந்தனர். மேலும் தி.மு.கவிற்கு விழ வேண்டிய கணிசமான வாக்குகளையும் கொங்கு நாடு மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பிரித்தனர். இதனால் கொங்கு மண்டலத்தில் தி.மு.க வேட்பாளர்கள் பலர் தோல்வி அடைந்தனர்.

சட்டமன்ற தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிருந்தால் தி.மு.க ஆட்சியை பிடித்திருக்கும் என்று கூட தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பேசப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் கூட்டணி குறித்து தி.மு.க பேச ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. 

பொள்ளாச்சி தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் போட்டியிட்டார். சுமார் இரண்டே முக்கால் லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தி.மு.க வேட்பாளரை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு வந்தார் ஈஸ்வரன். அவர் தோல்வி அடைந்தார். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பொள்ளாட்சி தொகுதியை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்க தயார் என்று பேச்சுவார்த்தையின் போது தி.மு.க கூறியுள்ளதாக தெரிகிறது. 

ஆனால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தரப்பில் திருப்பூர் மற்றும் கோவை தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க கூட்டணியில் இணையும் என்று சொல்லப்படுகிறது.