திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு..! பிடிவாதம் காட்டும் சபரீசன்..! அடம்பிடிக்கும் உதயநிதி..!
திமுக சார்பில் அமைக்கப்பட உள்ள கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் எப்படியேனும் இடம்பெற்று விட வேண்டும் என்று உதயநிதி காய் நகர்த்தி வருகிறார்.
திமுக சார்பில் அமைக்கப்பட உள்ள கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் எப்படியேனும் இடம்பெற்று விட வேண்டும் என்று உதயநிதி காய் நகர்த்தி வருகிறார்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை திமுக அமைக்கும். இதற்கு தொகுதிப் பங்கீட்டுக்குழு என்று திமுக சார்பில் பெயர் சூட்டப்படும். இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகளை முதலில் சந்தித்து பேசுவார்கள். அப்போது கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளை எதிர்பார்க்கின்றன, எந்தெந்த தொகுதிகளை விரும்புகின்றன என்பது குறித்து விவாதம் நடத்தப்படும். இதே போன்று திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க இயலும், எந்தெந்த தொகுதிகளை வழங்க இயலாது என்பது குறித்து எடுத்துரைக்கப்படும்.
இறுதியில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழு கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்களை திமுக தலைவரிடம் எடுத்துரைக்கும், அதன் பிறகு திமுக ஆலோசனை நடத்தி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்யும். பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கவும் கூட்டணிக்கட்சிகள் மனங்கோணாமல் தொகுதிகளை ஒதுக்கவும் திமுக இந்த தொகுதிப் பங்கீட்டுக்குழுவை அமைக்கும். கடந்த முறை துரைமுருகன் தலைமையில் தொகுதிப் பங்கீட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்த முறையும் அவர் தலைமையிலேயே தொகுதிப் பங்கீட்டு குழு அமைக்கப்பட உள்ளது.
என்ன தான் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை ஸ்டாலின் இறுதி செய்தாலும் இந்த தொகுதிப் பங்கீட்டுக் குழு கொடுக்கும் பரிந்துரைகளை ஸ்டாலின் பரிசீலிப்பது வழக்கம். உதாரணமாக ஒரே தொகுதியை கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் அல்லது அனைத்து கட்சிகளுமே கேட்கும். இது போன்ற சூழலில் அந்த தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதை தொகுதிப் பங்கீட்டு குழு முடிவு செய்யும். மேலும் அந்த தொகுதிக்கு பதில் கூட்டணி கட்சிகளுக்கு வேறு தொகுதியை பரிந்துரைக்கவும் தொகுதிப் பங்கீட்டுக்குழு முயற்சிக்கும்.
எனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டும் அல்ல கிட்டத்தட்ட திமுகவிற்கான தொகுதிகளையே கூட இறுதி செய்வது இந்த தொகுதிப் பங்கீட்டுக்குழு தான். இந்த குழுவில் உறுப்பினராக இருந்தால் எந்தெந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனவே தான் தொகுதிப் பங்கீட்டு குழுவில் உறுப்பினராக தற்போது முதலே உதயநிதி காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதலே கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க கூடாது என்று உதயநிதி கூறி வருகிறார்.
தற்போது சட்டமன்ற தேர்தலிலும் கூட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில் சேப்பாக்கம், மயிலாப்பூர் தொகுதிகளில் கண்டிப்பாக திமுக வேட்பாளர்களை நிறுத்தும் என்று தடாலடியாக அறிவித்துள்ளார். மேலும் திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு வழங்க கூடாது என்று ஸ்டாலினிடம் கூற உள்ளதாகவும் உதயநிதி தெரிவித்து வருகிறார். இப்படி தேர்தல் பிரச்சாரம் என்பதை எல்லாம் தாண்டி கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு வரை உதயநிதி கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் தொகுதிப் பங்கீட்டு குழுவில் இடம்பெறும் சில திமுக நிர்வாகிகள் தங்களுக்கு சாதகமான வகையில் தொகுதிகளை பெற கூட்டணி கட்சிகளை பயன்படுத்திக் கொள்வதாகவும் புகார் உள்ளது. எனவே தொகுதிப் பங்கீட்டு குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்க உதயநிதி திட்டமிட்டுள்ளார். இதற்கு அந்த குழுவில் உறுப்பினராக வேண்டும். விரைவில் இந்த குழு உறுப்பினர்களை ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். எனவே அந்த குழுவில் சேர்ந்துவிடும் முடிவுடன் உதயநிதி செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்த தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைப்பது ஸ்டாலின் மருமகன் சபரீசன் தான்.
சபரீசன் எப்போதுமே இந்த குழுவில் தனக்கு சாதகமான ஆட்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வார். அந்த வகையில் உதயநிதி தொகுதிப் பங்கீட்டு குழுவில் இடம்பெற முயற்சிப்பது சபரீசனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள். ஏற்கனவே பிரச்சாரம் என்கிற பெயரில் செல்லும் இடமெல்லாம் உதயநிதியால் சர்ச்சை ஏற்படுகிறது. எனவே உதயநிதியை தொகுதிப் பங்கீட்டு குழுவில் இடம்பெறாமல் தடுக்க சபரீசன் முயற்சிப்பதாக கூறுகிறார்கள்.