குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் நாளை நடைபெற உள்ள பேரணிக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்த மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவானது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது. கட்சிகளைத் தாண்டி அனைத்து தரப்பினரும் இப்பேரணியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 


இந்நிலையில் சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக கூட்டணியின் பேரணிக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் தாக்கல் செய்தார். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும்; பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படும் என்று மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான் வழக்கு அவசர வழக்காக தற்போது விசாரிக்கப்பட்டுவருகிறது. விடுமுறைக்கான சிறப்பு அமர்வில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் வழக்கை விசாரித்துவருகின்றனர். 
இந்த வழக்கில் அரசு தரப்பி ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், இந்தப் பேரணிக்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. சில நிபந்தனைகளை திமுக ஏற்கவில்லை என்று வாதிட்டார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.