’பரிதாபமாய் கொல்லப்பட்ட எங்கள் அப்பாவின் ஆன்மா பழிவாங்காமல் விடாது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு இனி அழிவுதான்.’ .........மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் சில நாட்களுக்கு முன் பொங்கிய வார்த்தைகள் இவை. 

பா.ம.க. இளைஞர்களின் அதிரடி நாயகனாய் இருந்தவர் காடுவெட்டி குரு. ராமதாஸ் குடும்பத்தில் மீது ஆயிரம் எரிச்சல்கள் இருந்தாலும் கூட இவருக்காகவே அந்த கட்சியில் ஒட்டியிருந்தோர் ஏராளம். ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக படுக்கையில் இருந்த குரு, சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். குரு மரித்த பின் அவரது மகன் கனலரசன், குருவின் அம்மா, சகோதரி ஆகியோர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு எதிராக பொங்கி எழுந்தனர். ‘எங்க அண்ணன் இயற்கையாக சாகலை. அவருக்கு தைலாபுரம் தோட்டத்துல ராமதாஸ் வீட்டுல விருந்து நடந்தப்ப, சாப்பாட்டுல ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்துட்டாங்க. 

அதுல படுத்தவர், ஒரேடியா போயிட்டார். அவருக்கு நல்ல சிகிச்சை தந்து, காப்பாத்துறதுக்கு ராமதாஸும், அவர் மகனும் விரும்பலை. எங்க அண்ணனின் மரணம் ஒரு வித கொலைதான்.’ என்றார் சகோதரி. குருவின் மகன் கனலரசனும் பா.ம.க. தலைமைக்கு எதிராக பெரும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஒரு காலத்தில் பா.ம.க.வில் கோலோச்சிவிட்டு பின் பிரிந்து, தமிழ வாழ்வுரிமை கட்சி எனும் தனி அமைப்பை துவக்கிய வேல்முருகனும், ‘குருவின் மரண மர்மங்கள் பற்றி எனக்கு தெரியும். சரியான நேரத்தில் வெளியிடுவேன்.’ என்று ஒரு பட்டாசை பற்ற வைத்தார். இப்படி மும்முனை தாக்குதலில் பா.ம.க. தலைமை பதறிப்போனது. 

போதாக்குறைக்கு வேல்முருகன் வேறு தி.மு.க.வுக்கு ஆதரவாகிவிட்டார் இப்போது. இந்த நிலையில் கூட்டணி தலைமையான அ.தி.மு.க.வும் ‘குரு குடும்பத்தோட குரலை கொஞ்சம் கவனியுங்க. அது தனி பிரச்னையா ஓடிட்டே இருக்குது. தேர்தல்ல சிக்கலை உண்டாக்கிடாட போகுது!’ என்று கண்டிப்பு காட்டியது. உடனே பரபரப்பாக களமிறங்கியது பா.ம.க. தலைமை. வேல்முருகனை மீண்டும் இழுப்பது ஆகாத வேலை, குருவின் அம்மா வயதானவர், சகோதரியோ குடும்ப பிணைப்பில் இருப்பவர். இவர்களையெல்லாம் தாண்டி துடிப்பாய் இந்த பிரச்னையில் குரல் கொடுப்பவர் அவரது மகன் கனலரசன் தான். அதனால் ‘அமுக்குங்கடா அவனை’ என்று ராமதாஸ் ஆணையிட, கனலரசனும் வளைக்கப்பட்டுவிட்டார். யெஸ் மீண்டும் பா.ம.க. ஆதரவு நிலையை எடுத்துவிட்டாராம் கனல். 

எப்படி? என்றால் ‘கனலரசன் தன் கனவிலும் நினைத்திடாத, அவரால் எண்ணிப் பார்க்கவே பல மணி நேரங்களாகிற தொகை ஒன்று அன்பளிப்பாக தரப்பட்டுள்ளது. அதுதான் காரணம்.’என்கின்றனர் சிலர். வேறு சிலரோ ‘குருவின் மனைவி, ராமதாஸின் உறவுப்பெண் தான். அவர் மூலமாக மகன் கனலை அடக்க முயன்றனர். ஆனால் பலிக்கவில்லை. இதனால் சில வகைகளில் அவரை நோக்கி சில கண்டிப்பு குரலை காட்டி பணிய வைத்தனர். பணிந்த பின் சந்தோஷப்படுத்தும் விதமாக கரன்ஸி மழை பொழிந்தது. 

இதன் மூலம் கனலின் சூடு தணிந்து, புஸ்ஸென்றாகிவிட்டார். “ என்கின்றனர். கனலரசன் இப்படி திடீரென புஸ்வாணமாவார் என்பதை தி.மு.க. எதிர்பார்க்கவில்லை. அதனால் ‘தோல்வி பயத்திலும், எங்கே குருவின் மரண விவகாரம் வெளியே வந்துவிடுமோ எனும் நடுக்கத்திலும் பணத்தை கொட்டி கனலரசனை வளைத்திருக்கிறது பா. ம.க. கேவலம் அரசியலுக்காக சொந்தக்காரனுக்கே பணம் கொடுத்து காலில் விழும் நிலைக்கு பா.ம.க. வந்துவிட்டது.” என்று தாறுமாறாக திட்ட துவங்கியுள்ளனர். ஆனால் எது எப்படியோ, கனலரசனின் வாய் அடைக்கப்பட்டுவிட்டதில் ஆளுங்கட்சி செம்ம ஹேப்பி!