பெருவெள்ளம் புரட்டியது அந்த ஊரை. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட அந்த நபர் மரத்தின் மீது ஏறி நின்றார். முழங்கால் அளவு தண்ணீர் போய்க் கொண்டிருந்த நிலையில் ‘ஆண்டவா முப்பொழுதும் உனை நினைக்கும் எனக்கா இந்த சோதனை? எனை காப்பாற்று!. என்ரு உருகினார் கடவுளை நினைத்து.

அந்த வழியாக பெரிய தெர்மகோலால் செய்யப்பட்ட தெப்பத்தில் வந்தவன் ’நண்பா என்னோடு வா. தப்பிடலாம்’ என்றான். இவரோ ‘வேண்டாம். கடவுள் என்னை காப்பாற்றுவார்.’ என்றபோது இடுப்பளவு தண்ணீர் ஏறியிருந்தது. டயர்களால் ஆன தக்கையில் வந்தவர் அழைத்தார். இவரோ  ”ஆண்டவன் நிச்சயம் வந்து என்னை கரை சேர்ப்பார்.” என்று சொல்லி மறுத்தபோது தண்ணீர் மார்பை தாண்டியிருந்தது.

சிறு மரக்கட்டைகளால் ஆன அவசர ஓடத்தில் வந்தவர் பதறி அழைத்தபோதும் இவர் “என் இறைவன் என்னை காப்பாற்றுவார் உறுதியாக.” என்ற பதிலை சொல்லி முடிக்க, தண்ணீர் தலை தாண்டிவிட்டது.  

மூர்ச்சையாகி மூழ்கிய அந்த மனிதனை தீயணைப்பு வீரர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அவசர சிகிச்சையில் படுத்திருந்தவர் நினைவு திரும்பியதும் கடவுளை நினைத்து ‘அவசர காலத்தில் இப்படி கண்டு கொள்ளாத உனைத்தான் நான் தினமும் வணங்கினேனா? தண்ணீரில் நின்று அழைத்தேனே வந்தாயா? காத்தாயா உன் பக்தனை?’ என்று சபித்தபடியே உறங்கினார், கனவில் வந்த கடவுள் சிரித்தபடி சொன்னார்...

’அட மானிடா, தெர்மகோல் தெப்பத்திலும், டயர் தக்கையிலும், மரங்களால் ஆன ஓடத்திலும் வந்து உனை அழைத்தது யார்? நாமே! மூர்ச்சையாகி மூழ்கிய உன்னை பாய்ந்து காப்பாற்றிய தீயணைப்பு வீரனும் நானே! கடவுள் இந்த கலி காலத்திலும் நீ போட்டோவில் பார்ப்பது போல் கிரீடம் தரித்து, கையில் வேலேந்தி, யானையில் வருவாரென்று நினைத்தாயா?” என்று கேட்டு மறைந்தார். பதறி எழுந்த மனிதர், தன் தவறை உணர்ந்தார், கண்ணீர் சிந்தினார். 

இந்த கதையை இப்படியே ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, சம கால அரசியலுக்கு வாருங்கள்...
ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க.வினுள்  குழப்பம் வெடித்து, ’தி.மு.க. இந்த சூழலை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்குமா?’ என்று அரசியல் விமர்சகர்கள் கேட்டபோது “பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வரமாட்டோம்.” என்றார் ஸ்டாலின். பன்னீர் பிய்த்துக் கொண்டு போய் சட்டசபையில் ஆளுங்கட்சி சந்தித்த அசாதாரண நிலையை பயன்படுத்தி அரசை கவிழ்ப்பார் என்று நினைத்த போது “சட்டசபை மாண்பு கெட்டுவிட்டது. உள்ளே என்னை தாக்கி சட்டையை கிழித்துவிட்டார்கள்.” என்று வெள்ளை பனியனோடு தன் வெள்ளந்தி அரசியல் மனதையும் காட்டினார். 

பன்னீர் அணி எடப்பாடி அணியுடன் இணைந்ததால், ஒதுக்கப்பட்ட தினகரன் தனி ஆவர்த்தனம் செய்யும் நிலையில் டி.டி.வி.யை கரெக்ட் செய்து ஆட்சியை பிடிப்பார் ஸ்டாலின் என்று நினைத்தார்கள். ஆனால் ’இந்த அரசு தானாக கவிழும்.’ என்றார்.

இதோ ஊழி தீயாக எழுந்த நீட் விவகாரத்தில் அனிதா எனும் கோழிக்குஞ்சு தன்னை கருக்கிக் கொண்டு சாம்பலாகிவிட, பள்ளிக்குழந்தைகள் கூட பதறிக் கொண்டு தெருவில் நின்று போராடுகிறார்கள். ஊதியம், பென்ஷன் உள்ளிட்ட பிரச்னைகளால் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் செய்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கை அறிவித்துவிட்டார்கள். ஆக ஒட்டு மொத்தமாக அரசு இயந்திரம் ஸ்தம்பித்து நின்று, மெதுவாக துருவேறிக் கொண்டிருக்கிறது. 

இந்த சூழலை அரசியல் சாணக்கியத்தனத்துடன் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதற்கான மூவ்களில் இறங்காமல் ‘தமிழக அரசை கவிழ்க்கும் வகையில் மக்களை திரட்டி போராடுவோம்.’ என்று உணர்ச்சிகரமாக ஸ்டாலின் சொல்லியிருக்கும் அதே நாளில்தான் ‘சட்ட ஒழுங்குக்கு இடையூறு செய்யும் வகையில் போராட்டங்கள் நடந்தால் கைது செய்ய வேண்டும்.” என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது. 

தளபதியாரே! சட்ட ஒழுங்கு விஷயத்தில் சலனமே ஏற்படுத்தா வகையில் நடத்துவது மக்கள் போராட்டமா? புரட்சியா? இப்படியொரு போராட்டத்தின் மூலம் ஆட்சி கலையுமென்று நினைத்தால், அவ்வ்வ்வ்வ்...வளவுக்கா மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் மனிதர்கள் ஆளும் அ.தி.மு.க.வினர்?!
இதுதானா உங்க டக்கு?! என்கின்றனர் விமர்சகர்கள்.