ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என தமிழக பாஜக துணை பொதுச்செயலாளர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நடிகர் சூர்யா நீட் தேர்வு பற்றி இன்னும் புரிந்துகொள்ள வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக எந்தவொரு மாணவரும், பெற்றொரும் சாலைக்கு வரவில்லை. நீட் தேர்வு அச்சத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது துரதிர்ஷ்டவசமானது. நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நீட் விவகாரத்தை அரசியல் தலைவர்கள் அரசியலாக்குகிறார்கள். சூர்யாவின் கேள்விகளுக்கான விடையை 2020 நீட் ரிசல்ட் சொல்லும். நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின்னர், நடிகர் சூர்யா நீட் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்.இந்தியை கட்டாய மொழியாக மத்திய அரசு அறிவிக்கவில்லை. திமுகவினர் நடத்தும் 47 பள்ளிகளில் தான் இந்தி 3வது மொழியாக திணிக்கப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், பேசிய அவர் தமிழகத்தில் அதிமுக– பாஜக கூட்டணி தொடர்கிறது. கூட்டணிக்குள் முரண்பாடுகள் வருவது சகஜமானதுதான். மும்மொழிக் கல்விக் கொள்கை விவகாரத்தில் பாஜக தெளிவாக இருக்கிறது என்றார்.