2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாஜக எதிர்ப்புக் கூட்டணியின் தலைவராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படுவார் என்று, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஆட்சியமைத்த பாஜக கூட்டணியின் பதவிக்காலம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன்படி, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. வழக்கமான மக்களவை தேர்தல்களை போன்றில்லாமல், இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக.,வுக்கும் 2019ம் ஆண்டு தேர்தல் முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது. 

இழந்துபோன செல்வாக்கை மீட்கும் வகையில் காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் களம் இறங்கியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு தொடங்கி, சோனியா காந்தி, நாடு முழுவதும் பல உதிரி கட்சிகளை ஒருங்கிணைத்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைத்து, திறமையாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், தற்போது வயது முதிர்வு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக, அவர் தீவிர கட்சிப் பணியில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். 
அதற்குப் பதிலாக, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், சில முக்கிய முடிவுகளில் சோனியா காந்தி ஆலோசனை தந்து வருகிறார். 

அதேசமயம், தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறிய சூழலில், பாஜக.,வுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாஜக.,வுக்கு பலத்த எதிர்ப்பலை காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி, சரியான கூட்டணி அமைத்தால், மக்களவை தேர்தலில் வெற்றிபெறுவது எளிது என்று, காங்கிரஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. 

இதே கருத்தை, தற்போது நடைபெற்று வரும் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் பலர் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, பாஜக எதிர்ப்புக் கூட்டணிக்கு, ராகுல் காந்தியே தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பிரதமர் மோடியை காட்டமாக விமர்சித்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாடு முழுவதும் ராகுலுக்கு செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகின்றனர். 

இதற்கேற்ப, ப.சிதம்பரம், மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனைப்படி, ராகுல் பாஜக.,வுக்கு எதிராக மெகா கூட்டணி ஒன்றை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவார் என்றும், காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்தில் தி.மு.கவுடன் கூட்டணியை தொடர்வதா அல்லது வேறு கட்சிகளை இணைத்து கூட்டணி அமைப்பதா என்பது குறித்தும் ராகுல் முடிவெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.