வாழ்ந்து கெட்ட கட்சி! என்று வஞ்சனையில்லாத பெயரை வாங்கி வைத்திருக்கிறது தே.மு.தி.க. நிஜந்தானே! சாதாரண சாதனையையா படைத்தது? கூட்டணிக்காக கருணாநிதியையே காவடி தூக்க வைத்தது மாபெரும் விஷயம். அம்மாம் பெரிய ஜெயலலிதாவையே ‘2016-ல் எங்களால்தான் ஆட்சியில் வந்தமர முடிந்தது.’ என்று பிரேமலதா இன்றும் சவடாலாய் பேச, அதற்கு வலுவான எதிர்ப்பை காட்ட வழியில்லாமல் அ.தி.மு.க. நிற்பதன் அர்த்தமும் இதைத்தானே உணர்த்துகிறது. 

ஆனால் தே.மு.தி.க. இப்படி தேஜஸாய் இருந்த காலங்களெல்லாம் ‘அது ஒரு கனா காலம்.’ என்றாகிவிட்டன என்பதும் நிதர்சனம். இன்று பி.ஜே.பி.யின் நெருக்கடியால் மட்டுமே ஆளுங்கட்சி, விஜயகாந்தை கூட்டணியில் இணைத்திருக்கிறாரே தவிர மற்றபடி இவர்களுக்கு ஒன்று தே.மு.தி.க. மீது பெரிய நம்பிக்கை இல்லை. தே.மு.தி.க.வின் இந்த சரிவுக்கு ஒரே காரணம், அக்கட்சியின் தலைவரான விஜயகாந்தின் உடல்நல சரிவுதான். உடல்தான் இளைக்கவில்லையே தவிர மற்றபடி உள் உறுப்புகளில் நிறைய சிக்கல்களே! என்கின்றன கேப்டனின் நிலையை அறிந்த சென்னை மருத்துவ வட்டாரங்கள். 

அமெரிக்காவில் சிறுநீர மாற்று சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும் பெரிய முன்னேற்றம் இல்லை. குரல் வளத்தை மீட்டெடுக்க கொடுக்கப்பட்ட பயிற்சியும் பெரிதாய் கைகொடுக்கவில்லை. தேர்தலுக்காக அவசர அவசரமாய் அழைத்துவரப்பட்டு விட்ட கேப்டன் தினமும் கிட்டத்தட்ட பாதி நாட்களை, அதாவது பனிரெண்டு மணி நேரமாவது தூக்கம் அல்லது தூக்க கலக்கத்தில் கழிக்கிறாராம். ஜுஸ், இட்லி என்று எளிதில் ஜீரணமாகும் உணவை மட்டுமே உண்கிறாராம். கேப்டனுக்கு கவுச்சி இல்லாமல் உணவு இறங்காது. 

ஆனால் ஜீரணிக்க சிரமமாகி, சிக்கலை உருவாக்கும் என்பதால் அசைவத்துக்கு நோ! நோ! சொல்லிவிட்டனர் அமெரிக்க டாக்டர்கள். தானாக எழவும், நடக்கவும் இயலாத நிலையில் இருக்கிறார் பாவம். ஆக இப்படியாக மெதுவாகத்தான் அவரது உடல் நிலை சீராகிக் கொண்டிருக்கிறது. சரிந்த கேப்டனின் உடல் நிலையை மருத்துவம் மூலமாக அவரது குடும்பம் சீராக்கிக் கொண்டிருக்கும் அதேவேளையில், தொடர்ந்து பல கோயில்களில் சிறப்பு பூஜை, பரிகார யாகம், சிறப்பு அர்ச்சனைகள் என்று செய்து கொண்டே இருக்கிறார்கள். அதாவது இயல்பான அளவை தாண்டி ஓவராக நடக்கிறது இந்த பூஜை புனஸ்கார வேலைகள். 

இதற்கு என்ன காரணம்? என தே.மு.தி.க.வினரிடம் கேட்டால்....”கேப்டனோட உடம்பு கெட்டுப் போக ஒரே காரணம், அவருக்கு வைக்கப்பட்ட செய்வினைதான்.  தமிழக அரசியல்ல அவர் தனிச்சிறப்பா வளர்ந்து வந்ததை பிடிக்காம ஒரு வி.வி.ஐ.பி. அவருக்கு மந்திரிச்சு வெச்சுட்டார். செருப்பு போடாமல் கேப்டன் நடந்த நேரத்துல அவரோட காலடி மண்ணை எடுத்து இந்த மந்திரிப்பு நடந்திருக்குது. கேப்டனோட காலடி மண்ணை எடுத்துக் கொடுத்தது எங்க கட்சியில் முக்கிய பொறுப்பில் ஒரு காலத்தில் இருந்தவர்தான். அந்த துரோகி இந்த கேடுகெட்ட வேலையை செஞ்சுட்டு கட்சியை விட்டு ஓடிட்டார்.

 

இந்த துரோகத்தால்தான் கேப்டன் இவ்வளவு சங்கடப்படுறார் பாவம். அதனால என்னதான் அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு போனாலும் அஞ்சு பைசாவுக்கு பிரயோசன்மாகாது. நம்ம ஊரின் பல கோயில்களில் பரிகாரம் செஞ்சுதான் அந்த மந்திரிப்பு மாயத்தை எடுக்க முடியும். அதே நேரத்துல கேப்டனுக்கு துரோகம் பண்ணினவருக்கும், அந்த எதிர்கட்சி வி.வி.ஐ.பி.க்கும் நாங்க மந்திரிச்சிருக்கோம். கூடிய சீக்கிரம் அவங்களோட வீழ்ச்சியை பார்ப்பீங்க!” என்கிறார்கள். கண்ணை கட்டுது!